நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் அருகே ஓராண்டுக்கு மேலாகியும் சீரமைக்கப்படாத ஹைமாஸ் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அவதி

புதுக்கோட்டை, பிப்.28: புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையில் பழுதடைந்த நிலையில் உள்ள உயர் கோபுர மின்விளக்கை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலை அடுத்த நார்த்தாமலையில் புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் அருகே சில வருடங்களுக்கு முன்பு புதிதாக உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. அந்த உயர் கோபுர மின்விளக்கு பயன்பாட்டில் இருந்து வந்த நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன் வீசப்பட்ட கஜா புயலில் உயர்கோபுர மின்விளக்கு கீழே சாய்ந்து விழுந்து பழுதடைந்தது. இதனால் உயர் கோபுர மின்விளக்குக்கு செல்லும் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் உயர்கோபுர மின்விளக்கு சீரமைக்கப்படவில்லை. அந்த உயர்கோபுர மின்விளக்குக்கு செல்லும் மின்இணைப்பு பெட்டி சேதம் அடைந்து விட்டது. அதன் அருகில் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இதனால் இந்த பகுதி இருளில் மூழ்கி கிடப்பதால் இரவு நேரங்களில் இவ்வழியாக கோயிலுக்கு செல்லும் பக்தர்கள், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.எனவே பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு பழுதடைந்துள்ள உயர்கோபுர மின்விளக்கை அதிகாரிகள் காலதாமதம் செய்யாமல் சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: