புதுக்கோட்டை அடுத்த வடகாடு முத்துமாரியம்மன் கோயிலில் ரத ஊர்வலம்

புதுக்கோட்டை, ஏப்.28: புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு முத்துமாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்ட திருவிழா முன்னிட்டு பாரம்பரிய முறைப்படி காளை மாடு பூட்டப்பட்ட ரதத்தில் அம்மன் வீதியுலா நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில்களில் ஒன்றான வடகாடு முத்துமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 21-ம் தேதி காப்புக்கட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதைத் தொடர்ந்து தினமும் மண்டகப்படி தாரர்கள் சார்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், வீதியுலா, அன்னதானம், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 6-ம் நாள் நிகழ்ச்சியை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அம்மன் எழுந்தருளல் செய்யப்பட்டது.

பின்னர், பாரம்பரிய முறைப்படி ஒரு ஜோடி காளை மாடு பூட்டப்பட்டு அம்மனின் ரத வீதியுலா நடைபெற்றது. ரதத்தின் முன்னால் நூற்றுக்கணக்கான பெண்கள் ஆரத்தி குடங்களை சுமந்தபடி பக்தி பரவசத்துடன் ஊர்வலமாக சென்றனர். வீதியெங்கும் விளக்குகளால் நிறைந்திருந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. தேரோடும் வீதியில் ஏராளமானோர் திரண்டு அம்மனை வழிபட்டனர். முக்கியத் திருவிழாவான தேரோட்ட திருவிழா நாளை (ஏப்.29-ம் தேதி) மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.

The post புதுக்கோட்டை அடுத்த வடகாடு முத்துமாரியம்மன் கோயிலில் ரத ஊர்வலம் appeared first on Dinakaran.

Related Stories: