அறந்தாங்கி மேற்பனைக்காடு வீரமாகாளியம்மன் கோயிலில் முளைப்பாரி திருவிழா, ஊர்வலம்

அறந்தாங்கி, பிப். 27: அறந்தாங்கி அருகில் உள்ள மேற்பனைக்காடு கிராமத்தில் காவிரி ஆற்றங்கரையில் எழுந்தருளியுள்ள வீரமாகாளியம்மன் கோயில் திருவிழா கடந்த வாரம் காப்புக்கட்டுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது.திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான முளைப்பாரி திருவிழாவையொட்டி விதை மண் சட்டிகள் மற்றும் சில்வர் பாத்திரங்களில் நவதானிய விதைகள் தூவி பாதுகாப்பாக வளர்த்து வந்தனர். நேற்று முளைப்பாரி திருவிழாவை முன்னிட்டு கிராம பொது மக்கள் முளைப்பாரிகளை ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலமாக தூக்கிச் சென்று மண்ணடித்திடலில் சுற்றிய பிறகு குளத்தில் கொட்டி சென்றனர்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான குதிரை எடுப்புத் திருவிழா வரும் 2ம் தேதி திங்கள் கிழமையும், அடுத்த நாள் கல் பொங்கல் விழாவும், 4ம் தேதி புதன் கிழமை மது எடுப்பு திருவிழா கிராம பொது மக்களால் நடத்தப்பட உள்ளது. மது எடுப்பு திருவிழாவை முன்னிட்டு கிராம மக்கள் குடத்தில் நெல் நிரப்பி அதில் தென்னம் பாளைகளை குடங்களில் அலங்கரித்து தாரை தப்பட்டைகள் முழங்க விண்ணதிரும் வாணவேடிக்கைகளுடன் கும்மியாட்டத்துடன் ஊர்வலமாக மண்ணடித்திடல் சென்று அங்கிருந்து காவிரி ஆற்றங்கரை வழியாக வீரமாகாளியம்மன் கோயிலுக்கு தூக்கி சென்று கோயில் அருகில் பாளைகளையும், குடத்தில் கொண்டு வந்த நெல்லையும் போட்டு வழிபாடுகள் நடத்தி செல்வார்கள். விழா நாட்களில் கிராம பொது மக்கள், விழாக் குழு மற்றும் உபயதாரர்களால் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

Related Stories: