குடியிருப்பு பகுதிகளில் கடைசி வீடுவரை குடிநீர் செல்வதை உறுதி செய்ய வேண்டும்: அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

புதுக்கோட்டை, ஏப்.30:புதுக்கோட்டை மாவட்டத்தில் குடியிருப்பு பகுதிகளில் கடைசி வீடு வரை குடிநீர் செல்வதை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் மெர்சி ரம்யா அறிவுறுத்தினார். புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், குடிநீர் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம், மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, தலைமையில் (நேற்று) நடைபெற்றது. பின்னர் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது; தமிழக அரசு சார்பில் அனைத்துத்தரப்பு மக்களும் பாதுகாப்பான, சீரான குடிநீரினை பெற்றிடும் வகையில், பல்வேறு குடிநீர் சார்ந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில், கோடை காலத்தில் குடிநீர் பற்றாகுறையை சமாளிப்பது, பொதுமக்களுக்கு சீரான குடிநீர் தங்கு தடையின்றி வழங்குவது தொடர்பாக, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்றையதினம் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக, நகர்ப்புற பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளை கண்டறிந்து, குடிநீர் பற்றாக்குறையை போக்கிட தேவையான நடவடிக்கைகளை எடுத்திடவும், குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் முதற்கட்டமாக திறந்த வெளி கிணறுகள் அமைக்கவும், குடிநீர் விநியோகம், மின் மோட்டார்கள் பழுது இருந்தால் அவற்றை உடனடியாக பழுது நீக்கம் செய்திடவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் தினசரி குடிநீர் விநியோகம் செய்திடவும், குறிப்பிட்ட நேரத்திற்கு குடிநீர் வழங்கவும், நீர்மட்டம் குறைவாக இருக்கும் பகுதிகளில் ஆழ்துளை கிணறு அமைக்க விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், குடியிருப்புகளுக்கு கடைசி வீடு வரை குடிநீர் செல்வதை உறுதி செய்யவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் இடங்களுக்கு மாற்று ஏற்பாடுகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்திட தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. குடிநீர் தேவைகள் குறித்து பொது மக்களிடமிருந்து வரப்பெறும் குறைகள் மீது உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திட பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் அறிவுறுத்தப்பட்டது. எனவே பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்கிட அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட கலெக்டர் மெர்சிரம்யா தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது). முருகேசன், செயற் பொறியாளர் (த.கு.வ.வா.). அய்யாசாமி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சீனிவாசன், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்).காளியப்பன், துணை இயக்குநர்கள் (சுகாதாரப்பணிகள்).ராம்கணேஷ் (புதுக்கோட்டை), மரு.நமச்சிவாயம் (அறந்தாங்கி), உதவி இயக்குநர் (கனிமங்கள்).லலிதா, வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை).டி.தயாவதி கிறிஸ்டினாள், பொன்னமராவதி பேரூராட்சி செயல் அலுவலர்.கணேசன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

The post குடியிருப்பு பகுதிகளில் கடைசி வீடுவரை குடிநீர் செல்வதை உறுதி செய்ய வேண்டும்: அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: