ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பள்ளிகளில் ஆய்வு மாணவிகளுடன் அமர்ந்து சத்துணவு சாப்பிட்ட மத்திய அரசு இணை செயலர்

வேலூர், பிப்.26: அரசுப்பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை இணை செயலாளர் ரஜித்குமார் சென் மாணவிகளுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டார். மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் ‘சமக்ரா சிக்ஷா’ திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பள்ளிக்கல்வியை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் மத்திய, மாநில அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் தமிழகத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகிறது. நடப்பு கல்வியாண்டில் ஒருங்கிணைந்த வேலூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

தேர்வு செய்யப்பட்ட இம்மாவட்டங்களில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளிகள், அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள், சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்களில் இத்திட்டத்தின் கீழ் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள், டிஜிட்டல் போர்டுடன் கூடிய நவீன வகுப்பறைகள், ஆய்வகங்கள், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, கழிவறை வசதி, கற்றல், கற்பித்தல் உபகரணங்கள், ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் மேம்பாடு, மாணவர்களின் கற்றல் திறன் மேம்பாடு, சத்துணவு மைய, அங்கன்வாடி மைய கட்டிடங்கள் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் மாதிரி பள்ளியாக தேர்வு செய்யப்பட்டுள்ள வேலூர் ஈவேரா நாகம்மையார் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ₹5 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மேற்கண்ட மாவட்டங்களில் சமக்ரா சிக்ஷா திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்வதற்காக மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சக இணை செயலாளர் ரஜித்குமார் சென் தமிழகம் வருகை தந்துள்ளார். நேற்று அவர் வேலூர் மாவட்டத்தில் வேலூர் ஈவேரா நாகம்மையார் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, காவேரிப்பாக்கம் அரசினர் மேல்நிலைப்பள்ளி, பூண்டி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மேல்மொணவூர் அரசினர் உயர்நிலைப்பள்ளி, தார்வழி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஜோலார்பேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உட்பட 10 அரசுப்பள்ளிகள் மற்றும் சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்களில் நேரில் கள ஆய்வு மேற்கொண்டார்.

வேலூர் ஈவேரா நாகம்மையார் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி சத்துணவு மையத்தில் மாணவிகளுடன் அமர்ந்து சத்துணவு சாப்பிட்டார். அப்போது சத்துணவு தயாரிக்கும் முறை, குடிநீர் வசதி என பல்வேறு அம்சங்களை சத்துணவு பணியாளர்களிடம் கேட்டறிந்தார். அதோடு ஆசிரியர்களிடம் அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். நேற்று தனது ஆய்வை முடித்துக் கொண்ட அவர் இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்கிறார். அதை தொடர்ந்து காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள அரசுப்பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்கிறார். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நடந்த ஆய்வின்போது முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

படவிளக்கம்

வேலூர் ஈவேரா நாகம்மையார் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட மத்திய அரசின் இணை செயலாளர் ரஜித்குமார் சென் சத்துணவு மையத்தில் மாணவிகளுடன் அமர்ந்து சத்துணவு சாப்பிட்டார். உடன் சிஇஓ மார்ஸ், மாவட்ட கல்வி அதிகாரிகள்.

Related Stories: