ஊசூரில் டெங்கு கொசு ஒழிப்பு பணி சரிவர செய்யாத களப்பணியாளர்கள் 4 பேர் சஸ்பெண்ட் கலெக்டர் அதிரடி

அணைக்கட்டு, பிப். 26: ஊசூரில் டெங்கு கொசு ஒழிப்பு பணி சரிவர செய்யாத களப்பணியாளர்கள் 4பேரை சஸ்பெண்ட் செய்து கலெக்டர் அதிரடி உத்தரவிட்டுள்ளார். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா ஊசூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 20 தற்காலிக டெங்கு கொசு ஒழிப்பு களப்பணியாளர்கள் உள்ளனர். இவர்களது பணிகளை மாவட்ட பூச்சியியல் வல்லுநர் சீனிவாசன், சுகாதார மேற்பார்வையாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி கடந்த 20ம் தேதி களப்பணியாளர்கள் கோவிந்தரெட்டிபாளையம் பகுதியில் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சென்ற மாவட்ட பூச்சியியல் வல்லுனர் சீனிவாசன், களப்பணியாளர்கள் வேலை செய்த வீடுகள் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது, அங்கு பணிகள் சரியாக செய்யாமல் கொசுக்கள் இருப்பதை கண்டுபிடித்தார். தொடர்ந்து, அங்கு வேலை செய்த 4 பேரை அழைத்து விசாரணை நடத்தினார்.

பின்னர், பணியை சரியாக செய்யாமல் இருந்த 3 ஆண்கள், ஒரு பெண் உட்பட 4 பேர் குறித்து சுகாதார துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் கலெக்டருக்கு தெரிவித்தனர். இதையடுத்து கலெக்டர் சண்முகசுந்தரம் அவர்களை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டார். அதன்படி, அந்த தற்காலிக பணியாளர்கள் 4 பேரையும் நேற்று சுகாதார மேற்பார்வையாளர் கிருஷ்ணமூர்த்தி அதிரடியாக பணி இடைநீக்கம் செய்தார். சுகாதாரத் துறை அதிகாரிகளின் இந்த நடவடிக்கையால் களப்பணியாளர்கள் தற்போது கலக்கத்தில் உள்ளனர்.

Related Stories: