ஏற்காடு முளுவி கிராமத்தில் சாலையை சீரமைக்க கோரி அரசு பஸ்சை மக்கள் சிறைபிடிப்பு

ஏற்காடு, பிப்.26: ஏற்காடு முளுவி கிராமத்தில் பழுதடைந்த தார் சாலையை புதுப்பிக்க கோரி, நேற்று காலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், அரசு பேருந்தை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம் ஏற்காடு பஸ் நிலையத்தில் இருந்து, 10 கிலோ மீட்டர் தொலைவில் முளுவி கிராமம் உள்ளது. இங்கு, 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் வேலைக்காகவும், மாணவ, மாணவிகள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்ல ஏற்காடு பஸ் நிலையம் வந்து சேலத்துக்கு செல்ல வேண்டி உள்ளது. முளுவி கிராமத்திற்கு செல்லும் தார் சாலை, கரடியூர் பிரிவு முதல் சேதமடைந்துள்ளது. கரடு முரடான சாலையில் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் பஸ்கள் தாமதமாக செல்கின்றன. இந்த சாலையை புதுப்பிக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த  மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், நேற்று காலை முளுவி கிராமத்திற்கு வந்த அரசு பேருந்தை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர்.

Advertising
Advertising

இதனால் அவ்வழியாக போக்குவரத்து தடைப்பட்டது. இதுகுறித்த தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த  ஏற்காடு வட்டார வளர்ச்சி அலுவலர் (பொ) குணசேகர் மற்றும் ஏற்காடு எஸ்.ஐ. ரகு ஆகியோர் கிராம மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். பழுதடைந்துள்ள சாலையை புதுப்பிக்க நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் அளித்தனர். இதனால் சமாதானமடைந்த பொது மக்கள், சிறைபிடித்த பஸ்சை விடுவித்து, அங்கிருந்து கலைந்து சென்றனர். பொதுமக்களின் போராட்டத்தை தொடர்ந்து ஏற்காடு ஒன்றியக்குழு தலைவர் சாந்தவள்ளி அண்ணாதுரை, துணைத்தலைவர் சேகர் மற்றும் அதிகாரிகள் முளுவி கிராமத்துக்கு நேரில் சென்று பழுதடைந்த சாலையை  பார்வையிட்டனர். பின்னர் அதிகாரிகள், அந்த சாலையை அளவீடு செய்து மொத்தமுள்ள 1.6 கிலோ மீட்டர் சாலையை சரி செய்ய திட்ட மதிப்பீடு உருவாக்கி, அனுமதிக்காக உயரதிகாரிகளுக்கு கொண்டு சென்றுள்ளனர்.

Related Stories: