விளாத்திகுளத்தில் மருத்துவ முகாம் குழந்தைகளுக்கு நல்ல உணவு பழக்க வழக்கங்களை எடுத்துக் கூறவேண்டும்

விளாத்திகுளம், பிப்.26: விளாத்திகுளத்தில் நடந்த  மருத்துவ முகாமை  தொடங்கி வைத்த கனிமொழி எம்பி, குழந்தைகளுக்கு நல்ல உணவு பழக்க வழக்கங்களை பெற்றோர் எடுத்து கூறவேண்டும் என்றார். மத்திய அரசு மற்றும் தமிழக அரசு பொது சுகாதாரத்துறை கோவில்பட்டி சுகாதார மாவட்டம் இணைந்து நடத்தும் மாபெரும் சுகாதார திருவிழா விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடந்தது. பேரிலோவன்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் இன்பராஜ் வரவேற்றார். கோவில்பட்டி சுகாதார பணிகள் துணை இயக்குநர் கிருஷ்ணலீலா தலைமையுரையாற்றினார். கனிமொழிஎம்பி  சிறப்பு விருந்தினராக பங்கேற்று மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பேசியதாவது.இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் முதியோர்கள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் உடல்நலம் பாதுகாத்தல் என்பது மிகவும் முக்கியமானது.  முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஆட்சி காலத்தில்தான் வரும்முன் காப்போம் என்ற திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு கிராமப்புறங்களிலும் மருத்துவர்கள் நேரடியாக சென்று பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டது.முதன்முதலில் கலைஞர் கொண்டுவந்த இந்த திட்டம் தற்போது பல்வேறு பெயர்களில் மாற்றம் மட்டும் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. பெண்கள், இளைஞர்கள் இந்த மருத்துவ முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு நல்ல உணவு பழக்க வழக்கங்கள், உடல் நலம் பேணுதல் பற்றி எடுத்துக் கூற வேண்டும். பொதுமக்கள் மருத்துவர்கள் வழங்கும் ஆலோசனைகளை பின்பற்றி உடல் நலத்தை நன்றாக பாதுகாத்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

 முகாமில் ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு கண்டறிதல், இசிஜி, ரத்த வகை கண்டறிதல், கண் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டது. முகாமில் 974 பேர் பயன்பெற்றனர். முகாமில்  கீதாஜீவன் எம்எல்ஏ, தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி நலப்பணிகள் இணை இயக்குனர் ஷியாமளா, தூத்துக்குடி காசம் துணை இயக்குனர் சுந்தரலிங்கம், ஒன்றிய செயலாளர்கள் சின்னமாரிமுத்து, என்கே.பெருமாள், மும்மூர்த்தி, செல்வராஜ் விளாத்திகுளம் நகர செயலாளர் வேலுச்சாமி உட்பட பலர் பங்கேற்றனர்.பேரிலோவன்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் சுகன் ராகவேந்திரா நன்றி கூறினார். தொடர்ந்து கனிமொழி எம்பி விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில்  திடீர் ஆய்வு செய்து அடிப்படை வசதிகள் பற்றி ேகட்டறிந்தார்.

Related Stories: