மாட்டுவண்டியில் மணல் அள்ளுவதற்கு மாத இறுதிக்குள் குவாரி அமைக்க நடவடிக்கை செந்துறையில் நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் முடிவு

அரியலூர், பிப்.26: மாட்டு வண்டியில் மணல் அள்ள மாத இறுதிக்குள் குவாரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என செந்துறையில் நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் முடிவு எடுக்கப்பட்டது. ஆலத்தியூர் வெள்ளாற்று பகுதியில் மாட்டு வண்டியில் மணல் அள்ள குவாரி அமைக்க கோரி இன்று குடும்பத்துடன் தளவாய் பெண்ணாடம் சாலையில் மாட்டுவண்டி உரிமையாளர்கள், தொழிலாளர்கள் சாலை மறியல் செய்வதாக கடந்த 17ம்தேதி நடைபெற்ற சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர். இந்நிலையில் நேற்று செந்துறை தாசில்தார் அலுவலகத்தில், கனிம மற்றும் சுரங்கத்துறை இயக்குனர் ஜோதி தலைமையில், அரியலூர் டிஎஸ்பி திருமேனி, செந்துறை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், தாசில்தார் தேன்மொழி முன்னிலையில் மணல்குவாரி தொடர்பான அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில், மணல் பற்றாக்குறையால் அரசு வழங்கும் கழிப்பிடம், தொகுப்பு வீடுகள், மற்றும் சிறு கட்டிடப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அரியலூர் மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாட்டுவண்டி மூலம் பிழைப்பு நடத்தும் உரிமையாளர்கள், தொழிலாளர்கள் குடும்பங்கள் வாழ்க்கை நடந்த, கால்நடை தீவனம் வாங்க போதிய வருமானம் இல்லாமல் உள்ளனர். எனவே வெள்ளாற்றில் மணல்குவாரி அமைக்க அரசு குவாரி அமைத்துத்தர வேண்டும் என மாட்டுவண்டி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து இம்மாத இறுதிக்குள் மாட்டு வண்டியில் மணல் அள்ள மணல் குவாரி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர். மேலும் இது குறித்து இன்று கலெக்டரிடம் கலந்தாய்வு நடத்தி முடிவெடிக்கப்படும் என தெரிவித்தனர். இந்நிகழ்வில் செந்துறை, தளவாய் போலீசார் மற்றும் 200க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி உரிமையாளர் சங்கத்தினர் மற்றும் தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: