நூதன முறையில் பைக்கில் மணல் திருடிய வாலிபர் கைது

நெல்லிக்குப்பம், பிப். 25:   நெல்லிக்குப்பம் பகுதியில் தென் பெண்ணை ஆறு மற்றும் கெடிலம் ஆற்றில் அரசு அனுமதியின்றி ஆற்று மணலை கடத்தி விற்பனை செய்பவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிந்து மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து வருகின்றனர். அதனையும் மீறி மாட்டு வண்டி ஓட்டிகள் பெண்ணையாறு மற்றும் கெடிலம் ஆற்றில் இருந்து அரசு அனுமதியின்றி மணலை திருடி சென்று அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனால் கட்டுமான பணிக்கு மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த இளைஞர்கள் நூதன முறையில் சாக்கு மூட்டைகளில் மணலை கட்டி பைக்குகள் மூலம் திருடி சென்று அதிக விலைக்கு விற்பனை செய்வது நெல்லிக்குப்பம் போலீசாருக்கு தெரியவந்தது. இதனை தடுக்கும் வகையில் நேற்று நெல்லிக்குப்பம் போலீஸ்

இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு மற்றும் போலீசார் அருங்குண குச்சிப்பாளையம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக சென்ற பைக்கை நிறுத்தி விசாரணை செய்ததில் கெடிலம் ஆற்றில் இருந்து பைக் மூலம் 2 சாக்கு மூட்டைகளில் ஆற்று மணலை திருடி சென்றது தெரியவந்தது. பைக் மூலம் மணல் கடத்தி சென்ற அருங்குணம் குச்சிப்பாளையத்தை சேர்ந்த முனுசாமி  மகன் முருகன் என்பவரை கைது செய்து அவர் மணல் கடத்தலுக்கு பயன் படுத்திய பைக்கையும் பறிமுதல் செய்தனர்.

Related Stories: