காடையாம்பட்டியில் கோழி கொண்டை பூ அறுவடை மும்முரம்

காடையாம்பட்டி, பிப்.21:  காடையாம்பட்டி பகுதியில் கோழி கொண்டை பூ அறுவடை தீவிரமாக நடந்து வருகிறது. நல்ல விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காடையாம்பட்டி பகுதியில் அதிக அளவில் பூங்கள் சாகுபடி செய்யப்படுகிறது. முக்கியமாக சாமந்தி, குண்டுமல்லி, மரிக்கொழுந்து, கோழிக்கொண்டை உள்ளிட்ட பூக்கள் அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த ஒராண்டாக மழை இல்லாதால் கோடைக்கு முன்பே, நிலத்தடி நீர்மட்டம் குறைந்து   தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையிலும் ஆழ்துளை கிணறு நீர் பாசனத்தில் பூக்கள் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது ஓமலூர் சுற்றுவட்டார பகுதிகளான மூக்கனூர், பூசாரிப்பட்டி,  கஞ்சநாயக்கன்பட்டி, காருவள்ளி உள்ளிட்ட பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கோழிகொண்டை பூக்கள், அறுவடை செய்து வருகின்றனர். தண்ணீர் பற்றாக்குறையால், கோழிகொண்டை பூக்கள் குறைவாகவே வருவதால், விலை அதிகரித்துள்ளது. இங்கு விளையும் கோழிக்கொண்டை பூக்கள், பெங்களூரு, திருப்பதி, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு வியாபாரிகள் அனுப்பி வைக்கின்றனர். குறைந்த அளவில் பூக்கள்  விளைச்சல் இருந்தாலும், கூடுதல் விலை கிடைப்பதால் விவசாயிகள்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: