சீர்காழி அல்லிவிளாகத்தில் ரேஷன்கடை ஊழியர்களை கண்டித்து சாலைமறியல்

சீர்காழி, பிப்.20: சீர்காழி அருகே அல்லிவிளாகத்தில் ரேஷன்கடை ஊழியர்களை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.நாகை மாவட்டம் சீர்காழி அருகே அல்லி விளாகம் கிராமத்தில் மகளிர் மகளிர்குழு சார்பில் ரேஷன் கடை நடத்தப்பட்டு வருகிறது. இந்த ரேஷன் கடையை கூட்டுறவு சங்கம் மூலம் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி மன்றம் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களிடம் ஊழியர்கள் வெற்றுப் பேப்பரில் கையெழுத்து வாங்கியதாக தெரிய வருகிறது.இதனை அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி முத்துக்குமரன் தலைமையில் அப்பகுதி மக்கள் ரேஷன் கடை முன் திரண்டு மகளிர் குழு நடத்தும் ரேஷன் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வெற்றுப் பேப்பரில் கையெழுத்து வாங்கியதாக கூறி ரேஷன் கடை ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தொடர்ந்து சாலைமறியல் செய்தனர்.இதுகுறித்து தகவலறிந்த சீர்காழி வட்ட வழங்கல் துறை தனி தாசில்தார் இந்துமதி மற்றும் பாகசாலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து சாலை மறியலில் கலந்து கொண்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் சீர்காழி-நாகப்பட்டினம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: