சேலம் மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும்

ஓமலூர், பிப்.19: நிர்வாக வசதிக்காக சேலம் மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என பாமக மாநில தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில் பாமக ஒருங்கிணைந்த மாவட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மாநிலத் தலைவர் ஜி.கே.மணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது, அவர் கூறியதாவது: தமிழகத்தில் 5ம் வகுப்பு, 8ம் வகுப்பு மாணவர்களுக்கான அரசு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது டாக்டர் ராமதாசுக்கும், கிராமப்புற ஏழை மாணவர்களுக்கும் கிடைத்த வெற்றியாகும். இந்த விவகாரத்தில் பொதுத்தேர்வு நடத்தக்கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்க வேண்டும். காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது. இதற்கான சட்டத்தை, தமிழக அரசு மத்திய அரசு ஒப்புதலுடன் கொண்டு வர வேண்டும். கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், சேலம் மாவட்டம் தலைவாசலில் ஆசிய அளவில் மிகப்பெரிய கால்நடை ஆராய்ச்சி நிலையம் தொடங்கியுள்ளதை போல, தமிழகம் முழுவதும் கால்நடை ஆராய்ச்சி நிலையங்கள் தொடங்க அரசு முன்வர வேண்டும். தமிழகத்தில் மிகப்பெரிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ள நிலையில், சேலம், திருவண்ணாமலை, கடலூர், திருவள்ளூர் மற்றும் கோவை மாவட்டத்தினை நிர்வாக வசதிக்காகவும், அரசின் நலத்திட்டங்கள் விரைவாக பொதுமக்களை சென்றடையும் வகையிலும் உடனடியாக பிரிக்க, தமிழக அரசு முன்வர வேண்டும்.

தமிழகத்தில் அனைத்து பகுதியிலும் நீராதாரம் நீடித்து இருக்கும் வகையில், காவிரி-கோதாவரி நதிகள் இணைப்பை மத்திய அரசு உடனடியாக தொடங்க வேண்டும். இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்திற்காக நடப்பாண்டிலேயே நிதி ஒதுக்கீடு செய்ய, பிரதமர் முன்வர வேண்டும். பாமகவின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று மேட்டூர் அணை உபரிநீரை கொண்டு, 100 ஏரிகளை நிரப்பும் திட்டத்தை அறிவித்துள்ள முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மேட்டூர் அணை உபரி நீர் திட்டத்தில் சேலம் மாவட்டத்தில் உள்ள நதிகளான ஓமலூர் சரபங்கா, சேலம் திருமணி முத்தாறு, ஆத்தூர் வசிஷ்ட நதிகளுடன் இணைக்கும் வகையில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேட்டியில் கூறினார்.

Related Stories: