கலப்படம், தரமற்ற பொருட்களை விற்ற 17 நிறுவனங்கள் மீது வழக்கு

சேலம், பிப். 13: சேலத்தில் கலப்படம், தரமற்ற பொருட்களை விற்ற 17 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் கலப்படம் மற்றும் தரமற்ற உணவு பொருட்கள் விற்கப்படுவதாக உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து சேலம் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமையிலான குழுவினர் ஆத்தூர், சங்ககிரி, இடைப்பாடி, மேட்டூர் ஓமலூர், சேலம் மாநகர் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.கடந்த மாதம் நடத்திய சோதனையில் தரமற்ற உணவுப்பொருட்களை விற்பனை செய்த 17 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தரமற்ற, கலப்பட ஆயில், மாசலாபவுடர், டீத்தூள் ஆகியவற்றில் கலப்பட பொருள் கலந்து விற்பனை செய்தது சோதனையில் கண்டறியப்பட்டது. இதேபோல், 27 இடங்களில் உணவு பொருட்கள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டு, அவை உணவு பகுப்பாய்வு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் அறிக்கை வந்ததும்  நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் கூறுகையில், ‘சேலத்தில்  கடந்த மாதத்தில் கலப்பட பொருட்களை விற்ற 17 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பரிசோதனைக்கு மாதிரி எடுக்கப்பட்டதில் 12 நிறுவனங்களின் பொருட்கள் சட்டவிரோதம் என கண்டறியப்பட்டது. இந்த நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படவுள்ளது. சேலம் வருவாய் நீதிமன்றம் மூலம் 5 வழக்குகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்து இது போன்ற ஆய்வுகள் நடத்தப்படும்,’’என்றனர்.

Related Stories: