ரோசல்பட்டி, வ.புதுப்பட்டியில் தீண்டாமைச் சுவரை அகற்ற கோரிக்கை

விருதுநகர், பிப்.11: விருதுநகர் அண்ணாநகர் வாழ் பறையர் முன்னேற்ற சங்கம் சார்பில் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ரோசல்பட்டி ஊராட்சி அண்ணாநகரில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 100 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா 1979ல் வழங்கப்பட்டது. பயனாளிகளுக்கு 9 மீ பொதுப்பாதையும் ஒதுக்கப்பட்டது. பொதுப்பாதை தொடர்பாக விவரங்கள் அரசு ஆவணங்களில் உள்ளது. பொதுப்பாதை அருகில் உள்ள தங்கமணி காலனியில் உள்ள 6 மீ பொதுப்பாதை இணையும் இடத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் செல்லக்கூடாது என்ற நோக்கில் 10 அடி உயர தடுப்புச்சுவர் தனிநபரால் எழுப்பப்பட்டுள்ளது. ஆண்டாண்டு காலமாக பயன்படுத்தி வந்த பொதுப்பாதையை மறைத்து எழுப்பப்பட்ட தீண்டாமை சுவரை அகற்ற வேண்டும்’ என மனுவில் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் அயோத்திதாசர் மாணவர்கள் அமைப்பு அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: வத்திராயிருப்பு அருகில் வ.புதுப்பட்டி திருவிக தெருவில் இரு சமுகத்தினர் வசித்து வருகின்றனர். ஒரு சமூகத்தினர் தெருவை மறித்து தீண்டாமைச் சுவர் எழுப்பி உள்ளனர். பேரூராட்சி அனுமதி பெறாமல் கட்டப்பட்ட சுவரை அகற்ற கோரி பல மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை. சுவருக்கு மறுபுறம் உள்ள பொதுக்கழிப்பறையை பயன்படுத்தமுடியவில்லை. அரசு உதவி பெறும் பள்ளியில் குழந்தைகள் படிக்கவும், ஓட்டு போடவும் போக முடியாத நிலை உள்ளது. சுவரை அகற்றி அனைவரும் பயன்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளனர்.

Related Stories: