திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில் பிரமோற்சவ தேரோட்டம் கோலாகலம்: பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

பூந்தமல்லி, பிப். 6: தமிழ்நாட்டில் மிகவும் புகழ் பெற்ற அம்மன் கோயில்களில் ஒன்றாக  திருவேற்காட்டில் அமைந்துள்ள தேவி கருமாரியம்மன் கோயில் திகழ்ந்து வருகிறது. தமிழகம் மட்டுமன்றி ஆந்திரம், கர்நாடகம், புதுவை, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசித்து செல்கின்றனர். ஆண்டு தோறும் இந்த கோயிலில் பிரமோற்சவ திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விழா கடந்த ஜனவரி மாதம் 29ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து வரும் 18ம் தேதி வரை பிரமோற்சவ திருவிழா நடைபெறுகிறது.  மூலவர் அம்மனுக்கு நேற்று காலை சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக  தேரோட்டம் நடைபெற்றது. வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் தேவி கருமாரியம்மன் எழுந்தருளினார்.

பின்னர் இணை ஆணையர் செல்லதுரை தேரோட்டத்தை தொடங்கி வைக்க, அங்கு திரண்டிருந்த திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். சந்நதி தெரு, தம்புசாமி நகர், தேரோடும் வீதி, கோலடி சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியே சென்ற தேர் மீண்டும் நிலையை வந்தடைந்தது. விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் செல்லதுரை மற்றும் அதிகாரிகள் செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அறங்காவலர் ரமேஷ், சத்திய நாராயணன், மாரியப்பன் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.  

Related Stories: