அரசு பள்ளிகளில் காலி பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க கோரிக்கை

திருவள்ளூர், ஜூன் 23: தமிழ்நாடு முதலமைச்சர், பள்ளி கல்வி அமைச்சர், பள்ளி கல்வித் துறை முதன்மைச் செயலாளர் ஆகியோருக்கு தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழக மாநில பொதுச் செயலாளர் சா.ஞானசேகரன் ஒரு கோரிக்கை மனு அனுப்பி வைத்துள்ளார் அதன் விவரம் வருமாறு: தமிழ்நாட்டில் பள்ளிகள் திறந்து 2 வாரங்கள் நிறைவடைந்து உள்ளன. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நிரப்பப்படாமல் தொடர்ந்து காலியாக உள்ளது. மேலும் கடந்தாண்டு 600க்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற்று தலைமை ஆசிரியர்களாக சென்றுள்ளதால் அந்தப் பணியிடங்கள் தொடர்ந்து காலியாகவே உள்ளது. இதனால் அரசு பள்ளியில் படிக்கின்ற மாணவர்கள் ஆசிரியர் இல்லாமல் பாதிக்கப்படுகின்றனர்.

மேலும் நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளதால் தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் சிக்கல் உள்ளதாக அறிகிறோம். எனவே நீதிமன்ற வழக்கை காரணம் காட்டி தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்ய முடியாமல் போனால் போதிய ஆசிரியர்கள் இன்றி வருகின்ற முதல் பருவத் தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்ய முடியாத நிலை ஏற்படும். எனவே போர்க்கால அடிப்படையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தகுதி வாய்ந்த ஆசிரியர்களின் பட்டியல் இருந்தால் அவர்களை உடனே நியமனம் செய்ய அரசு முன்வர வேண்டும். இல்லையேல் மாவட்டம் தோறும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்க அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் அந்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளார்.

The post அரசு பள்ளிகளில் காலி பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: