கல்லடை டி.இடையபட்டியில் மாரியம்மன், செல்வகணபதி கோயில் கும்பாபிஷேக விழா

தோகைமலை, ஜன. 31: கரூர் மாவட்டம் தோகைமலை அருகே கல்லடை ஊராட்சி டி.இடையபட்டியில் பாலக்காட்டு மஹா மாரியம்மன், செல்வ கணபதி கோயில்கள் தனித்தனியாக உள்ளது. இந்த கோயில்களுக்கு திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த ஊர் பொதுமக்கள் முடிவு செய்தனர். அதனை தொடர்ந்து பாலக்காட்டு மஹா மாரியம்மன், செல்வகணபதி பரிவார கோயில்களுக்கு மஹாகும்பாபிஷேகம் செய்ய காவிரியில் இருந்து பால் குடம், தீர்த்த குடங்கள் எடுத்து வரப்பட்டு கோயிலில் வைத்து சிறப்பு அபிஷேகம் செய்தனர். முதல்கால பூஜையில் முளைப்பாரி அழைத்து வருதல், அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, தனபூஜை, கோபூஜை, ஆற்றுக்கு செல்லுதல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் விக்னேஷ்வர பூஜை, அங்குரார்ப்பணம், ரக்ஷா பந்தனம், யாகசாலை பிரவேசம், வாஸ்து சாந்தி, கும்பலங்காரம் உள்பட பல்வேறு பூஜைகள் செய்து தீபாராதனை நடைபெற்றது. 2ம் நாள் மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசகம், பிம்ப ரக்ஷாபந்தனம், நாடிசந்தானம், யாத்ராதானம், கடம்புறப்பாடுகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பாலக்காட்டு மஹா மாரியம்மன், செல்வகணபதி கோயில்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மூலவர் கும்பாபிஷேகம், மஹா அபிஷேகம், தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் விழா கமிட்டியாளர்கள், நன்கொடையாளர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Related Stories: