கிருஷ்ணராயபுரம், டிச.17: கிருஷ்ணராயபுரம் அருகே சங்கரேஸ்வரர் கோயில் கோபுர கலசத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து மாயனூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கரூர் மாவட்டம்,கிருஷ்ணராயபுரம் அருகே சங்கரமலைபட்டியில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த சிவாலயம் சௌந்தரநாயகி அம்மன் சமேத சங்கரேஸ்வரர் கோயில் சுமார் 200 அடி உயரம் உள்ள பாறையின் மீது அமைந்து உள்ளது. இக்கோவில் இந்து சமய அறநிலைய துறையினர் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் இக்கோவில் புனரமைக்க சமீபத்தில்தான் (செப்டம்பர் மாதம்) பாலாலயம் நடந்து திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.
இக்கோவிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் கோபுரத்தில் இருந்த கலசத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்று உள்ளனர். அவ்வழியாக செல்லக்கூடிய பொதுமக்கள் கோவில் கோபுரத்தின் மேல் கலசம் இல்லாததை கண்டு அதிர்ச்சடைந்து இந்து சமய அறநிலைத்துறைக்கு தெரியப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து கோவில் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் மாயனூர் போலீசார் கோபுர கலசத்தை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பழமை வாய்ந்த சிவாலயத்தின் கோபுர கலசம் திருடி போனது குறித்து கிருஷ்ணராயபுரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
