விநியோக கட்டமைப்பு குளறுபடி சோதனை ஓட்டம் நடந்தும் குடிநீர் திட்டம் அமலாகவில்லை தேனி மக்கள் தவிப்பு

தேனி, ஜன. 28:தேனி நகராட்சிக்கு வைகை அணையில் இருந்து ரூ. 68 கோடி செலவில் புதிய குடிநீர் திட்டத்தின் மூலம் கடந்த 6 மாதங்களாக குடிநீர் சப்ளை செய்யப்பட்டு சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. ஆனால், விநியோக கட்டமைப்பில் உள்ள குளறுபடியால் திட்டத்தை ஏற்க நகராட்சி நிர்வாகம் தயக்கம் காட்டி வருகிறது. தேனி நகராட்சிக்கு ரூ.68 கோடி செலவில் வைகை அணையில் இருந்து குடிநீர் கொண்டு வரும் திட்டம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த திட்டத்தை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் செய்து முடித்துள்ளது. இதற்காக நகரில் புதிதாக 4 ராட்சத தொட்டிகள் கட்டியதோடு, வீடுகளுக்கும் புதிய திட்டத்தில் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வீடுகளுக்கு இணைப்புகள் வழங்கும் பணி நடந்து வருகிறது. கடந்த 6 மாதங்களாக குடிநீர் வழங்கும் சோதனை ஓட்டம் நடந்து வருகிறது.

கடந்த 2019 அக்டோபரில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திடமிருந்து, குடிநீர் விநியோகிப்பதை நகராட்சி தனது பொறுப்பில் பெற்றுக்கொள்வதாக இருந்தது. ஆனால், விநியோக கட்டமைப்பில் பெருமளவில் லீக்கேஜ்கள் உள்ளன. இதனால் ‘அனைத்தையும் சரி செய்து தாருங்கள்’ என கூறி நகராட்சி ஒதுங்கி கொண்டது. தற்போது வரை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளே திட்டத்தை பராமரித்து வருகின்றனர். சோதனை ஓட்டமும் நடத்தி வருகின்றனர். ஆனால் தற்போது வரை இத்திட்டத்தை ஏற்கும் நிலையில் நகராட்சி இல்லை.திட்டப்பணிகளில உள்ள தரக்குறைபாடே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இது குறித்து இருதரப்பினரும் வெளிப்படையாக கூற தயக்கம் காட்டி வருகின்றனர். இவ்வளவு பெரிய திட்டத்தை தயாரித்தும், நகராட்சியில் இன்னமும் சரிவர குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. பல இடங்களில் ஒரு வாரமாகியும் குடிநீர் சப்ளை இல்லை. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘1 மாதத்தில் அனைத்தையும் சரி செய்து தருவதாக குடிநீர் வடிகால் வாரியம் கூறியுள்ளது’’ என்று தெரிவித்தனர்.

Related Stories: