இடைப்பாடி அருகே ஊருக்குள் புகுந்த மயில் படுகாயத்துடன் மீட்பு

இடைப்பாடி, ஜன.28:  இடைப்பாடி அருகே ஊருக்குள் புகுந்த மயில், வேலியில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இடைப்பாடி மற்றும் சுற்றியுள்ள ஆவணியூர் உள்ளிட்ட பகுதிகளில் சரபங்கா ஆற்று படுகை, கரட்டு நிலங்களில் அதிகளவில் மயில்கள் வசித்து வருகின்றன. இந்த மயில்கள் இரை தேடுவதற்காக அருகிலுள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். குறிப்பாக நெல், நிலக்கடலை, சோளம், மரவள்ளி, கரும்பு பயிர்களை நாசம் செய்வதாக தெரிவிக்கின்றனர். இந்நிலையில், நேற்று காலை மோட்டூர் பகுதியில் வழக்கம்போல் மயில்கள் கூட்டம் ஊருக்குள் புகுந்தது. பின்னர், விளைநிலங்களில் இரை தேடுவதற்காக சென்றபோது ஒரு மயில் பாதுகாப்பு வேலியில் சிக்கி படுகாயமடைந்தது. பின்னர், அங்கிருந்து பறந்து சென்ற அந்த மயில், ஊருக்குள் உள்ள ஒரு வேப்பமரத்தில் தஞ்சமடைந்தது. அதனைக்கண்ட அப்பகுதியைச் சேர்ந்த விடுதலைச் நிறுத்தைகள் நிர்வாகி செல்வகுமார் மற்றும் பொதுமக்கள் விரைந்து சென்று மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த அந்த மயிலை மீட்டனர். பின்னர், இடைப்பாடி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று உரிய முதலுதவி சிகிச்சையளித்தனர். மேலும், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து, நங்கவள்ளி வனக்காவலர் உதயகுமாரிடம் ஒப்படைத்தனர்.

Related Stories: