நாகையில் பள்ளி பரிமாற்ற நிகழ்ச்சி நடுக்கடலுக்கு படகில் சென்று மாணவ, மாணவிகள் கள ஆய்வு

நாகை, ஜன.24: மீனவர்களின் வாழ்க்கை பாடத்தை கற்றுக்கொள்ள நாகையில் நடுக்கடலுக்கு படகில் சென்று பள்ளி மாணவ மாணவிகள் பள்ளி பரிமாற்ற நிகழ்ச்சியில் ஈடுபட்டனர். பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் புத்தகத்திலுள்ள உள்ள பாடங்களை படித்து வந்தாலும், வெளி உலகில் நடக்கும் சம்பவங்களை அனுபவரீதியாக தெரிந்து கொள்வதற்காக பள்ளி பரிமாற்ற நிகழ்ச்சியை தமிழக பள்ளி கல்வித்துறை செயல்படுத்தி வருகிறது. இதற்காக ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியரும், பள்ளி நிர்வாகமும் பள்ளி பரிமாற்ற நிகழ்ச்சியின் மூலம் விவசாயம் மற்றும் கிராமங்களில் வாழும் மனிதர்களின் வாழ்க்கை முறை குறித்து களத்திற்கு மாணவ, மாணவிகளை அழைத்துச் செல்கின்றனர்.

இதன்படி நாகை கீச்சாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மற்றும் கலசம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை சேர்ந்த 8ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் மீனவர்களின் வாழ்க்கை பாடத்தை கற்றுக்கொள்ள, பள்ளி பரிமாற்ற நிகழ்ச்சியின் மூலம் நடுக்கடலுக்கு படகில் அழைத்து செல்லப்பட்டனர். தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தின் சார்பில் சிறப்பு அனுமதி பெறப்பட்டு நடுக்கடலுக்குச் சென்ற மாணவ, மாணவிகளுக்கு கடல் அலைகள், படகு இயக்குதல் ஆகியவற்றை நேரடியாக பார்த்து கற்றுக்கொண்டனர். இதையடுத்து படகு கட்டுமான தளத்திற்கு சென்று படகுகள் கட்டுவதையும் நேரடியாக தெரிந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து மீன் பதப்படுத்தும் நிலையத்திற்கு சென்று அங்கு மீன்கள் மற்றும் மீன் உணவுகள் பதப்படுத்தப்பட்டு மதிப்புக்கூட்டி விற்கப்படுவதை தெரிந்து கொண்டனர். மீன் ஊறுகாய், இறால்பொடி, மீன் பாஸ்தா தயாரிக்கும் முறைகள் குறித்தும் மீனவ பெண் தொழிலாளர்கள் மாணவ, மாணவிகளிடம் எடுத்து கூறினர்.

Related Stories: