புவனகிரி பகுதியில் விவசாய பணிகளுக்காக தார்பாய் வாடகைக்கு விடும் பணி தீவிரம்

புவனகிரி, ஜன. 24: இந்த ஆண்டு நல்ல மழை பெய்ததால் நெற்பயிர் விளைச்சல் அமோகமாக உள்ளது. கடந்த சில தினங்களாக நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. நெல் அறுவடை செய்த பிறகு நெற்கதிர்களை அடித்து மூட்டைகளில் பிடிப்பதற்கு பெரும்பாலும் கிராமங்களில் உலர் களங்கள் இருக்கும். ஆனால் தற்போது பெரும்பாலான களங்கள் செயல்படாமல் இருக்கிறது.இந்நிலையில், நெற்கதிர்களை அடித்து காய வைப்பதற்கு வசதியாக தார்பாயை வாடகைக்கு விடும் பணிகளில் ஆந்திர மாநில தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். புவனகிரி அருகே உள்ள வடக்குத்திட்டை, தெற்குத்திட்டை, மேலமணக்குடி, பு. மணவெளி, ஆலம்பாடி உள்ளிட்ட கிராமங்களில் அறுவடை செய்பவர்கள் தார்பாய்களை வாடகைக்கு எடுத்து செல்கின்றனர். இதனால் ஆந்திராவில் இருந்து வந்துள்ள தொழிலாளர்கள் தார்பாயை தைத்து வாடகைக்கு விட்டு வருகின்றனர்.தினசரி வாடகை மூலம் நல்ல வருவாய் கிடைப்பதால் ஆந்திர மாநில தொழிலாளர்கள் இந்த பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Related Stories: