கடலைக்காய் விளைச்சல் அமோகம்

சேலம், ஜன.23:  சேலம் எருமாபாளையத்தில் கடலைக்காய் அமோக விளைச்சல் தந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். சேலம் மாவட்டத்தில் பரவலாக கடலைக்காய் சாகுபடி செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தில் சாகுபடி செய்தால் டிசம்பர், ஜனவரியில் அறுவடை செய்யப்படும். இந்த வகையில் கடந்தாண்டு பெய்த மழையால் பெரும்பாலான விவசாயிகள் கடலைக்காய் சாகுபடி செய்ய ஆர்வம் காட்டினர். அதன்படி, பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் கடலைக்காயை சாகுபடி செய்தனர்.

இவ்வாறு சாகுபடி செய்யப்பட்டுள்ள இடங்களில் கடலைக்காய் அமோக விளைச்சலை தந்துள்ளது. இந்த வகையில் சேலம் அடுத்த எருமாபாளையத்தில் சில விவசாயிகள் கடலைக்காய் சாகுபடி செய்துள்ளனர். அந்த பகுதியில் நல்ல விளைச்சல் தந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘சேலம் சுற்று வட்டார பகுதிகளில் பல ஏக்கரில் கடலைக்காய் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. சாகுபடி செய்யப்பட்டுள்ள பகுதிகளில் கடலைக்காய் நல்ல விளைச்சலை தந்துள்ளது. இந்த பகுதிகளில் அறுவடை செய்யப்படும் கடலைக்காய் எண்ணெய் அரவை ஆலைகளுக்கும் அனுப்பி வருகிறோம். மேலும் வீடுகளில் சாப்பிடவும் விற்பனை செய்யப்படுகிறது. நடப்பாண்டு விவசாயிகள் எதிர்பார்த்த அளவில் விளைச்சல் கொடுத்துள்ளது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,’’ என்றனர்.

Related Stories: