சாலையை ஆக்கிரமித்து நெல் காய வைக்கும் அவலம்

சிதம்பரம், ஜன. 23: சிதம்பரம் சுற்று வட்டார கிராமங்களில் தற்போது நெல் அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ளது. இரவு மற்றும் காலை நேரங்களில் லேசாக பனி பெய்து வருவதால்  அறுவடை செய்யப்படும் நெல் பெரும்பாலும் ஈரமாகவே உள்ளது. இவற்றை காயவைக்க சிலர் நெடுஞ்சாலைகளை பயன்படுத்துவது ஆபத்தானதாக மாறி உள்ளது.சிதம்பரம் அருகே உள்ள மணலூர்-சிலுவைபுரம் புறவழிச்சாலை சந்திப்பில் உள்ள நெடுஞ்சாலைகளில் ஏராளமானோர் நெல்லை சாலையிலேயே கொட்டி காய வைக்கின்றனர். நீண்டதூரம் வரை நெல் குவியலாக இருப்பதால் இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலை குலைந்து விடுகின்றனர். சாலைகளை ஆக்கிரமித்து நெல்லை காய வைப்பதால் அடிக்கடி புறவழிச்சாலையில் விபத்துகளும் ஏற்படுகிறது.இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் நெல் காய்ந்து கொண்டிருப்பதை பார்க்கும்போது நெல்மணிகள் மீது வாகனத்தை ஏறி செல்வதா அல்லது ஒதுங்கி செல்வதா என்ற குழப்பம் ஏற்பட்டு விபத்துகளில் சிக்கி விடுகின்றனர்.மேலும் நெல் காய வைக்கும் போது சாலையின் அகலம் குறைந்து விபத்துகள் அடிக்கடி நிகழ்கிறது.

நெடுஞ்சாலை ரோந்து பணிக்கென தனியே ஒரு போலீஸ் வாகனம்  ஏற்படுத்தப்பட்டு, அதில் போலீசாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களது பணியே சாலைகளில் நடக்கும் விபத்துகளை சீரமைப்பது, விபத்துகள் ஏற்படாமல் சாலையை நெரிசல் இல்லாமல் வைத்திருக்க வேண்டும். ஆனால் அந்த போலீசார் நெடுஞ்சாலை ரோந்து பணியின்போது எதையும் கண்டு கொள்வதில்லை, என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.  நெடுஞ்சாலைகளை ஆக்கிரமித்து நெல் உள்ளிட்ட விவசாய பொருள்களை காய வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் விபத்துகளும் உயிரிழப்புகளும், நாளுக்கு நாள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும், காவல் துறையினரும் இணைந்து சாலைகளை ஆக்கிரமித்து நெல் காய வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுனர்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: