வார விழாவில் 2வது நாள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

கரூர், ஜன. 22: 31வது சாலை பாதுகாப்பு வார விழாவினை முன்னிட்டு ஜனவரி 21ம் தேதி முதல் 27ம் தேதி வரை பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சாலை பாதுகாப்பு வாரத்தின் இரண்டாம் நாளான நேற்று மாணவ, மாணவிகள், ஓட்டுநர்கள் கலந்து கொண்ட சாலை பாதுகாப்பு குறித்து திருக்காம்புலியூர் ரவுண்டானா பகுதியில் துவங்கிய பேரணியை மாவட்ட கலெக்டர் அன்பழகன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இந்த பேரணி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று திருவள்ளுவர் மைதானத்தில் முடிவடைந்தது. இந்த பேரணியில் தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டக்கூடாது என்பது குறித்தான வாசகங்கள் அடங்கிய பதாதைகளை அனைவரும் ஏந்திச் சென்றனர். முன்னதாக செய்தி மக்கள் தொடர்பு துறையின் மின்னணு வாகனம் மூலம் சாலை பாதுகாப்பு விதிகள் குறித்தும், பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வது குறித்தும் விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், ஒட்டுநர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த், போக்குவரத்து கழக பொதுமேலாளர் குணசேகரன், கோட்டாட்சியர் சந்தியா, தாசில்தார் அமுதா உட்பட அனைத்து அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Related Stories: