சொத்து தகராறில் தம்பியைக் கொன்ற அண்ணனுக்கு ஆயுள் தேனி கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

தேனி, ஜன. 21:  சொத்து தகராறில் தம்பியை கொன்று புதைத்த அண்ணணுக்கு தேனி நீதிமன்றம் 7 ஆண்டு சிறைக்காவல் தண்டனையுடன், ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது. தேனி நகர், சிவாஜி நகரில் குடியிருப்பவர் மாயாண்டி மனைவி ராஜாமணி (65). இவர் தனது மகன் சுந்தரபாண்டியை (27) காணவில்லை என்றும், அவரை யாராவது கொலை செய்திருக்கலாம் என தேனி போலீசில் 2016, டிசம்பர் மாதம் புகார் செய்தார்.   இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த தேனி போலீசார் விசாரித்து வந்தனர். இதில் சுந்தரபாண்டி தேனி பழைய பஸ்நிலையம் அருகே உள்ள நகராட்சி பழைய புதைகுழி மயானத்தில் புதைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து தேனி தாசில்தார் முன்னிலையில் பிணம் தோண்டியெடுக்கப்பட்டு, புதைக்கப்பட்ட சுந்தரபாண்டியின் பிரேத உடற்கூறுகள் பிரேத பரிசோதனைக்கு தேனி அரசினர் மருத்துவக் கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இதில் சுந்தரபாண்டி கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, சுந்தரபாண்டி காணாதது குறித்து அவரது தாய் ராஜாமணி கொடுத்த வழக்கை கொலைவழக்காக தேனி போலீசார் மாற்றி விசாரணை துவக்கினர்.

சொத்து தகராறில் 2016ம் ஆண்டு டிச. 6ம் தேதி சுந்தரபாண்டியை அவரது அண்ணன் பாண்டியராஜன் கழுத்தை நெரித்து கொன்று, உடலை தேனி பழைய பஸ்  நிலையம் அருகே உள்ள நகராட்சி பழைய புதை மயானத்தில் புதைத்தது  தெரியவந்தது. தேனி போலீசார் பாண்டியராஜன் மீது கொலை செய்தது, கொலை செய்த தடயத்தை மறைப்பது ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். வழக்கு விசாரணை தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அப்துல்காதர் முன்னிலையில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல்.வெள்ளைச்சாமி ஆஜரானார்.

நீதிபதி அப்துல்காதர் நேற்று தீர்ப்பளித்தார். தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட பாண்டியராஜன் குற்றவாளி என்பதை உறுதிசெய்து, அவருக்கு கொலை தடயத்தை மறைத்த குற்றத்திற்காக ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராதத்தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக ஒரு ஆண்டு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும். கொலை செய்த குற்றத்திற்கான பிரிவில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்தும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத் தொகை செலுத்தத் தவறினால் கூடுதலாக ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தார். முதலில் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையையும், அதனைத் தொடர்ந்து ஆயுள்தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.

Related Stories: