பொங்கல் பண்டிகைக்காக அறந்தாங்கியில் இருந்து அதிகளவு பஸ்கள் வெளியூர்களுக்கு இயக்கம்

அறந்தாங்கி, ஜன.21:பொங்கல் பண்டிகைக்காக அறந்தாங்கியில் இருந்து சென்னை, கோவை,திருப்பூர் போன்ற இடங்களுக்கு அதிக அளவில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதால், புதுக்கோட்டை போன்ற பகுதிகளுக்கு பேருந்துகள் உரிய நேரத்திற்கு வராததால் பயணிகள் அவதிக்கு உள்ளாகினர்.

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் தங்கள் சொந்த ஊர்களில் கொண்டாட வசதியாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் போன்ற அரசுடைமையாக்கப்பட்ட போக்குவரத்து கழகங்கள் தமிழகம் முழுதும் ஆயிரக்கணக்கான சிறப்பு பேருந்துகளை இயக்கின. இதேப்போல தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக அறந்தாங்கி பனிமணையில் இருந்து சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. சிறப்பு பேருந்துகளை இயக்குவதற்காக வழக்கமாக பேருந்துகள் சென்று வரக்கூடிய, புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, கோட்டைப்பட்டினம், பட்டுக்கோட்டை போன்ற பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் ரத்து செய்யப்பட்டன.

இந்த நிலையில் பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து பொதுமக்கள் கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தாங்கள் வசிக்கும் இடங்களுக்கு அதிகளவில் செல்லத் தொடங்கினர். இதனால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறந்தாங்கியில் இருந்து சென்னை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களுக்கு அதிகளவில் சிறப்பு பேருந்துகளை இயக்கியது. இதனால் வழக்கமாக புதுக்கோட்டை, திருச்சி, காரைக்குடி, மதுரை, கோட்டைப்பட்டினம், பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டிய பேருந்துகள் இயங்கவில்லை. இதனால் பொங்கல் விடுமுறை, பள்ளி, கல்லூரி விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர் நேற்று காலை தாங்கள் வழக்கமாக செல்லும் புதுக்கோட்டை, திருச்சி செல்லும் பேருந்துகளில் செல்வதற்காக அறந்தாங்கி பேருந்து நிலையம் சென்றனர். ஆனால் வழக்கமான நேரத்திற்கு செல்லும் பேருந்துகள் எல்லாமல் சிறப்பு பேருந்துகளாக இயக்கப்பட்டதால், பேருந்து கிடைக்காமல் மாணவ, மாணவியர், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். எனவே பண்டிகை காலங்களில் சிறப்பு பேருந்துகளை இயக்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்து இயக்கத்தில் கவனம் செலுத்துவதோடு, பொதுமக்கள், மாணவ, மாணவியருக்கு பாதிப்பு ஏற்பாடாமல் இருக்க வழக்கமான பேருந்து இயக்கத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

Related Stories: