ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பழங்குடியினர் விடுதி, பள்ளிகளில் காலியாக உள்ள 112 சமையலர், துப்புரவு பணியாளர்களுக்கான நேர்முக தேர்வு

வேலூர், ஜன.21: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பழங்குடியினருக்கான விடுதிகள், உண்டு உறைவிட பள்ளிகளில் சமையலர் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கான 112 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்முக தேர்வு வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தொடங்கி, இன்றும், நாளையும் நடக்கிறது. வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் துப்புரவு, சமையலர் பணிக்கான நேர்முகத்தேர்வு நேற்று நடந்தது. ஆதிதிராவிடர் நல இணை இயக்குனர்(பொது) தேன்மொழி தலைமை தாங்கினார். மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் வேணுசேகரன் முன்னிலை வகித்தார். இதில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இருந்து பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களில், தகுதியான விண்ணப்பதாரர்கள் கலந்து கொண்டனர்.

நேர்முக தேர்வில் சமையல் குறிப்புகள் போன்றவை குறித்த எழுத்து தேர்வு நடந்தது. பின்னர் அதுகுறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. மொத்தம் 3 நாட்கள் நடைபெறும் இந்த தேர்வில், ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த 2,120 பேர், வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் விண்ணப்பித்த 483 பேரும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. நேர்முக தேர்வில் பங்கேற்று அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பணி வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தேர்வு இன்றும், நாளையும் நடக்கிறது.

Related Stories: