நெல் வயல்களில் இயற்கை முறையில் பூச்சிகளை கட்டுப்படுத்துவது எப்படி?

புவனகிரி, ஜன. 21: புவனகிரி வட்டார வேளாண்மை துறை சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் இயற்கை முறையில் பூச்சிகளைக் கொல்லும் நவீன செயல்விளக்க பயிற்சி நடந்தது. புவனகிரி அருகே உள்ள உளுத்தூர் கிராமத்தில் நெல்லில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த முகாமிற்கு மேல்புவனகிரி வட்டார வேளாண்மைத்துறை உதவி இயக்குனர் சுதாமதி தலைமை தாங்கினார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரியாராணி வரவேற்று பேசினார். முகாமில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் கல்லூரி உழவியல் துறை பேராசிரியர் டாக்டர் பாபு பங்கேற்று பேசினார்.

அப்போது நெல் வலங்களில் இயற்கையான முறையில் பூச்சிகளைக்கட்டுப்படுத்த மூங்கில் குச்சி மற்றும் தென்னை மட்டைகளைக் கொண்டு ஆங்கில டி வடிவத்தில் வயலில் பறவைகள் அமர்வதற்கான கூடுகளை தயாரிக்க வேண்டும் என்றும், ஒரு ஏக்கர் நெல் வயலுக்கு 20 முதல் 25 கூடுகள் வரை சுமார் 5 அடி உயரத்தில் அமைக்க வேண்டும் என்றும், அவ்வாறு அமைக்கப்பட்ட கூட்டில் பறவைகள் அமரும்போது பயிர்களில் உள்ள பூச்சிகளை தின்றுவிடும். இதனால் இயற்கை முறையில் பூச்சிகள், எலிகள் உள்ளிட்டவை அழியும் என செயல் விளக்கம் அளித்தார். இந்த பயிற்சி முகாமில் சுமார் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று பயனடைந்தனர். முகாமிற்கான ஏற்பாடுகளை புவனகிரி வட்டார வேளாண்மைதுறை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சந்தானகிருஷ்ணன், இளையராஜா ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: