5 வயதுக்கு உட்பட்ட 2.54 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

கடலூர், ஜன. 20: கடலூர் மாவட்டத்தில் 5 வயதுக்கு உட்பட்ட 2 லட்சத்து 54 ஆயிரம் குழந்தைகளுக்கு  போலியோ சொட்டு மருந்து புகட்டுவதற்கான முதல் கட்ட முகாம் நேற்று நடந்தது. கடலூர் மாவட்டம் முழுவதும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், தனியார் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், சத்துணவு மையங்கள் என 1,611 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது.  ஆற்றுத் திருவிழா நடைபெறும் இடங்களில் கூடுதலாக முகாம்கள் அமைத்து விழாவிற்கு வந்த 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து புகட்டப்பட்டது.பொது சுகாதாரத் துறையுடன் இணைந்து மருத்துவத்துறை, பள்ளிக்கல்வித்துறை, ஊட்டச்சத்துத்துறை, சமூக நலத்துறை, வருவாய்த்துறை, இந்திய மருத்துவக்கழகம், இந்திய குழந்தைகள் நல மருத்துவக் கழகம், மற்றும் அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சார்ந்த 6,444 பணியாளர்கள் மூலம் கடலூர் மாவட்டத்தில் 5 வயதிற்குட்பட்ட 2 லட்சத்து 54 ஆயிரத்து 78 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

இது தவிர பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், கோயில்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களில் நடமாடும் முகாம்களும், மாவட்ட எல்லையோரங்கள், குடிசை பகுதிகள், புதிதாக உருவான காலனிகள், பணி நிமித்தம் இடம் பெயர்ந்து வந்தவர்கள் வசிக்கும் இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்டி போலியோ சொட்டு மருந்து முகாமினை துவக்கி வைத்தார். இதில் கடலூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் டாக்டர் கீதா, இணை இயக்குநர் நலப்பணிகள் டாக்டர் ரமேஷ்பாபு, கடலூர் நகராட்சி ஆணையர் ராமமூர்த்தி, நகர்நல அலுவலர் டாக்டர் அரவிந்த்ஜோதி, திருப்பாதிரிபுலியூர் நகர ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் கிறிஸ்டி, பொறியாளர் தாயுமானவர் உள்பட பலர் கலந்து கொண்டனர். நேற்று விடுபட்ட குழந்தைகளுக்கு இன்று(20ம் தேதி) வீடுகளுக்கு சென்று பணியாளர்கள் போலியோ சொட்டு மருந்து புகட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

திட்டக்குடி:  மங்களூர் வட்டார மருத்துவ அலுவலர் கலைச்செல்வி தலைமையில் அரசு மருத்துவர்கள் சிந்தனைச்செல்வி, சாந்தகுமார், சங்கீதா, கொளஞ்சிநாதன், சவுமியா ஆகியோர் கொண்ட மருத்துவ  குழுவினர் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியை மேற்கொண்டனர். 18 ஆயிரத்து 548 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. திட்டக்குடி அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவர் செல்வேந்திரன் தலைமையில் துர்காதேவி, யாசின், பாலமுருகன் ஆகியோர் கொண்ட மருத்துவர் குழு, இப்பணியை மேற்கொண்டது. திட்டக்குடி பேரூராட்சி பகுதியில் இளமங்கலம், திட்டக்குடி, வதிஷ்டபுரம், தர்மகுடிக்காடு, கோழியூர் உள்ளிட்ட மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

Related Stories: