ரயில் உபயோகிப்பாளர் சங்கம் கோரிக்கை மன்னார்குடியில் வங்கியில் கொள்ளை முயற்சி ? முன்புற இரும்பு கேட் உடைந்து கிடந்ததால் அதிர்ச்சி

மன்னார்குடி, ஜன. 14: மன்னார்குடியில் இயங்கும் தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியின் முன்புற இரும்பு கேட் உடைந்து கிடப்பதாக வந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வங்கியில் கொள்ளை முயற்சி நடந்ததா என்பது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கோபால சமுத்திரம் கீழ வீதியில் தேசிய மாக்கப்பட்ட ஒரு வங்கி பல வருடங்களாக இயங்கி வருகிறது. இந்த வங்கியில் இரவு நேர பாதுகாவலர் பணியமர்த்த படவில்லை என கூறப்படுகிறது. நேற்று முன்தினம் வார விடுமுறை என்பதால் வங்கி இயங்க வில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வங்கி வழியே சென்ற சிலர் வங்கி யின் முன்புற இரும்பு கேட் உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு வங்கி ஊழியர்களுக்கும் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் டிஎஸ்பி கார்த்திக், இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார், வங்கியின் மேலாளர் சத்திய நாராயணன் மற்றும் ஊழியர்கள் வங்கிக்கு விரைந்து வந்தனர்.

அப்போது உடைந்து கிடந்த இரும்பு கேட்,வங்கியின் சுற்றுப்புற பகுதிகளை போலீசார் பார்வையிட்டனர். அதனை தொடர்ந்து வங்கி அதிகாரிகள் முன்னி லையில் வங்கியை திறந்து உள்ளே சென்ற போலீசார் வங்கியில் கொள்ளை முயற்சி ஏதேனும் நடந்ததா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதில் வங்கியில் கொள்ளை எதுவும் நடைபெறவில்லை என்பது தெரிய வந்தது. இதனால் வங்கியில் இருந்த லட்சக்கணக்கான பணம் தப்பியது. இதுகுறித்து வங்கி தரப்பில் இருந்து போலீசில் புகார் கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இருப்பினும் டிஎஸ்பி கார்த்திக் உத்தரவின் பேரில் வங்கியின் முன்புறம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். வங்கியில் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் மர்ம நபர்கள் யாரேனும் இரும்பு கேட்டை உடைத்தனரா அல்லது வாகனம் மோதியதால் கேட் உடைந்ததா என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் மன்னார்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: