திருவாரூர் மாவட்டத்தில் இன்று 5 மையங்களில் 1,605 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர் ஒரு மணி நேரத்திற்கு முன்பாக வர கட்டுப்பாடு

திருவாரூர், மே 5: திருவாரூர் மாவட்டத்தில் இன்று 5 மையங்களில் நடைபெறும் நீட் தேர்வினை மொத்தம் ஆயிரத்து 605 பேர்கள் எழுதுகின்றனர். எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மற்றும் சித்தா, யுனானி, ஓமியோபதி மற்றும் ஆயுர்வேதம் ஆகிய இளங்கலை மருத்துவ படிப்பில் சேர்வதற்காக ஒன்றிய அரசு மூலம் நீட் எனப்படும் தேசிய தகுதி நுழைவு தேர்வானது ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

இதனையொட்டி இந்த தேர்வுக்கு பிளஸ் 2 வகுப்பில் கணிதம் மற்றும் அறிவியல் பிரிவினை பாடமாக தேர்வு செய்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இந்த நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வு எழுதி வருகின்றனர். இதனையொட்டி நடப்பாண்டில் இந்த தேர்வானது இன்று (5ந் தேதி) நாடு முழுவதும் ஆங்கிலம், இந்தி, தமிழ், குஜராத்தி உட்பட பல்வேறு மொழிகளில் நடைபெறுகிறது.

அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் இந்த தேர்வுக்காக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 940 பேர் உட்பட மொத்தம் ஆயிரத்து 605 பேர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில் இவர்களுக்காக திருவாரூர் வேலுடையார் மேல்நிலைப் பள்ளியில் 624 பேர்களும், பைபாஸ் சாலையில் இயங்கி வரும் டிரினிட்டி சிபிஎஸ்சி பள்ளியில் 264 பேர்களும், கூத்தாநல்லூர் டெல்டா பப்ளிக் பள்ளியில் 216 பேர்களும், திருத்துறைப்பூண்டி எஸ்.வி.எஸ் மேல்நிலைப் பள்ளியில் 213 பேர்களும் மற்றும் திருவாரூர் நீலக்குடியில் இயங்கி வரும் மத்திய பல்கலைக்கழகத்துடன் இணைந்த கேந்திர வித்யாலயா பள்ளியில் 288 பேர்களும் என மொத்தம் ஆயிரத்து 605 பேர்களும் தேர்வு எழுதுவதற்கு 5 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மதியம் 2 மணி துவங்கி மாலை 5.20 மணி வரையில் 3.20 மணி நேரம் நடைபெறும் இந்த தேர்வானது இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களில் ஒவ்வொரு பாடத்திற்கு 50 வினாக்கள் வீதம் மொத்தம் 200 வினாக்கள் கேட்கபட்டு இதில் 180 வினாக்களுக்கு தலா 4 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறுகிறது. மேலும் காலை 11.40 மணி முதல் மதியம் 1.30 மணிக்குள் தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு தேர்வு மையத்திற்குள் அனுப்பப்படவுள்ளனர்.

கட்டுப்பாடுகள்
இந்த தேர்வினையொட்டி காலை 11.40 மணி முதல் மதியம் 1.30 மணி வரையில் தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர். மேலும் 1:30 மணிக்கு பின்னர் வருபவர்களுக்கு அனுமதி கிடையாது. 2 மணி அளவில் தேர்வு துவங்கி மாலை 5.20 மணி வரையில் மொத்தம் 3 மணி நேரம் 20 நிமிடம் இந்த தேர்வானது நடைபெறுகிறது.

மேலும் விண்ணப்பதாரர்கள் மூலம் தேர்வு மையத்திற்கு எடுத்து வரப்படும் குடிநீர் பாட்டிலானது வெளியில் கண்ணாடி போல் தெரியும் வகையில் இருக்க வேண்டும். பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஒன்று, ஹால் டிக்கெட் மற்றும் அடையாள ஆவணமாக ஆதார் கார்டு, டிரைவிங் லைசன்ஸ், பான் கார்டு, ஓட்டர் ஐடி, பாஸ்போர்ட் இவற்றில் ஏதாவது ஒன்றுமட்டும் எடுத்துச் செல்ல வேண்டும். மேலும் ஹால் டிக்கெட்டில் ஒட்டுவதற்கு ஏற்றவாறு போஸ்ட் கார்டு சைஸ் போட்டோ ஒன்றும் கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் உயரமான ஹில்ஸ் அணிந்த செருப்புகள், ஷு ,வாட்ச் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் போன்றவை தேர்வு மையத்திற்குள் அனுமதி கிடையாது.

மேலும் தோடு மூக்குத்திகள் உள்ளிட்ட நகைகளும் அனுமதி கிடையாது. மேலும் ஜீன்ஸ் போன்ற இறுக்கமான உடைகள், முழுக்கை சட்டை, அதிக பாக்கெட்டுகள் மற்றும் ஜிப்புகள், லெகின்ஸ் போன்ற உடைகளுக்கு அனுமதி கிடையாது இது மட்டுமின்றி பரிதா அணிந்து வரும் மாணவிகள் தேர்வு மையத்திற்குள் குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்திற்கு முன்பாக வரவேண்டும் என்பது உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

The post திருவாரூர் மாவட்டத்தில் இன்று 5 மையங்களில் 1,605 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர் ஒரு மணி நேரத்திற்கு முன்பாக வர கட்டுப்பாடு appeared first on Dinakaran.

Related Stories: