செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு பொதுமக்கள் சாலை மறியல்

நெல்லிக்குப்பம், ஜன. 8:நெல்லிக்குப்பம் மோரை தெருவில், செல்போன் டவர் அமைக்க இடம் ஒன்றை குத்தகை எடுத்தவர்கள், நேற்று முன்தினம் செல்போன் டவர் அமைப்பதற்கான பணிகளை தொடங்கினார்கள். அப்போது அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் யார் இந்த இடத்தை வாங்கியுள்ளார்கள், வீடு கட்ட போகிறார்களா என விசாரித்துள்ளனர். அப்போது அங்கு பணியாற்றியவர்கள் இந்த இடத்தில் செல்போன் டவர் வரப் போகிறது என கூறியுள்ளனர். இதனைஅறிந்த அப்பகுதி மக்கள் இன்று மட்டும் வேலை செய்து விட்டு போங்கள், நாளையில் இருந்து வேலைக்கு வர வேண்டாம். மீறி வந்தால் வேலை செய்ய விடமாட்டோம் என எச்சரித்து அனுப்பியுள்ளனர். இந்நிலையில் நேற்று காலை பணி செய்ய வந்தவர்களை அப்பகுதி மக்கள் கண்டித்து திருப்பி அனுப்பி வைத்தனர். மேலும் சிலர் வந்து ஆபாச வார்தைகளால் திட்டிவிட்டு, பணியை தொடங்கினர்.

இதனை அறிந்த அப்பகுதி மக்கள் ஒன்று கூடி வேலை செய்வதை தடுத்து நிறுத்தினார்கள். சுற்றி வீடுகள் இருக்கும் இடத்தில் டவர் கட்டினால் அணு கதிர்களால் எங்கள் பகுதி மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். இங்கு டவர் கட்ட அனுமதிக்க மாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்தனர். இதை தொடர்ந்து ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு ஆலை ரோடு மும்முனை சந்திப்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல் நிலையம் சென்று மனு கொடுக்க சென்றவர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அதனை தொடர்ந்து ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் காவலர்கள் கூறியதன் பேரில் முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபுவிடம் மனுவை கொடுத்து, எங்கள் பகுதியில் செல்போன் டவர் வரக்கூடாது என கோரிக்கை வைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Related Stories: