வெள்ளாற்றில் மணல் குவாரி அமைக்க அளவீடு செய்ய வந்த அதிகாரிகள் தடுத்து நிறுத்தம்

திட்டக்குடி, ஜன. 8: வெள்ளாற்றில் மணல் குவாரி அமைக்க அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை கிராம மக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. திட்டக்குடி பகுதியில் இயங்கும் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்கத்தினர், தங்களின் வாழ்வாதார பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் இடைச்செருவாய், இறையூர், தொழுதூர் ஆகிய பகுதிகளில் வெள்ளாற்றில் மணல் குவாரி அமைத்து தர வேண்டுமென முறையிட்டு வருகின்றனர். இந்நிலையில், கனிம வளத்துறை உதவி பொறியாளர் சசிதரன் மற்றும் தொழில் நுட்ப பிரிவினர் இடைச்செருவாய் வெள்ளாற்றில் மணல் எடுக்க அனுமதிக்கப்படும் பகுதியை நிர்ணயம் செய்யும் பொருட்டு வெள்ளாற்றில் உரிய அளவீடு செய்ய வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள், இடைச்செருவாய் கிராமத்தில் ஏற்கனவே கடுமையான குடிநீர் பிரச்னை நிலவுகிறது. இளமங்கலம், இடைச்செருவாய் பகுதிகளில் சில ஆண்டுகளுக்கு முன் மணல் குவாரி இயங்கியதால் இப்பகுதியில் முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் வற்றியுள்ளது.

மணல் குவாரிகளில் மூன்று அடி ஆழத்திற்கு மட்டுமே மணல் எடுக்க அனுமதிக்க வேண்டும் என உயர் நீதிமன்றமும், உச்சநீதி மன்றமும் உத்தரவிட்டுள்ளன. ஆனால் பல இடங்களில் முப்பது அடி ஆழத்திற்கு மேல் மணல் எடுக்கப்பட்டுள்ளதால் குவாரிகள் ராட்சத கிணறுகள் போல் காட்சியளிக்கின்றன. சுவையான குடிநீர் கிடைத்து வந்த நிலை மாறி குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. விவசாயத்திற்கு என ஆழ்குழாய் கிணறுகள் மூடப்பட்டு வெள்ளாறு கட்டாந்தரையாக மாறியுள்ளது. இடைச்செருவாயில் மணல் குவாரியை திறக்கக்கூடாது. அவ்வாறு திறந்தால் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்த நேரிடும் என்றனர். இதையடுத்து அளவீடு செய்யாமல் அதிகாரிகள் திரும்பி சென்றனர்.

Related Stories: