அதிமுக தோல்வி பயம் பாஜவை தூண்டிவிட்டு வாக்கு எண்ணிக்கை நிறுத்தம் சின்னமனூரில் பெரும் பரபரப்பு

சின்னமனூர், ஜன.3: சின்னமனூரில் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவினர் தோல்வி பயத்தால் பாஜவை தூண்டி விட்டு வாக்கு எண்ணிக்கையை நிறுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய தேர்தலில்  கிருஷ்ணய்யர் மேல்நிலைப் பள்ளியில் வாக்கு பதிவு எண்ணிக்கை துவங்கியது. முதல் ரவுண்டே மதியம் 1 மணியளவில் தான் முடிந்தது. துவக்கத்தில் இருந்தே வாக்கு எண்ணுவதிலும் மந்தமான சூழ்நிலையே காணப்பட்டது. வாக்குகள் எண்ணி முடித்தாலும் அதனை அப்படியே வெளியிடாமல் நிறுத்தி வைத்தனர். இதற்கிடையில் திமுக தலைமைக்குழு உறுப்பினர் விஜயராஜ், சின்னமனூர் ஒன்றிய செயலாளர் அண்ணாத்துரை உள்ளிட்ட முகவர்களாக சென்ற திமுகவினர், வாக்கு எண்ணிக்கையை தாமதப்படுத்துவதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதன் பிறகு தான் சின்னமனூர் ஒன்றியத்தில் வாக்கு எண்ணிக்கை முடிவு அறிவிக்கத் துவங்கப்படடது. இதற்கிடையில் சின்னமனூர் சின்ன ஓவுலாபுரத்தில் தபால் ஒட்டு உட்பட மொத்த வாக்குகளும் வேட்பாளர்கள் முகவர்களின் மத்தியில் வாக்குகள் அனைத்தும் எண்ணி முடிக்கப்பட்டது. இந்த முடிவு திமுகவிற்கு சாதகமாக இருக்கிறது என அதிமுகவினருக்கு தெரிய வந்தது. இதற்கிடையில் 7 மணியளவில் பாஜ மாவட்ட துணைத்தலைவர் பிரபாகரன், மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் தலைவர் அய்யப்பராஜா உள்ளிட்ட 10 பேர், எங்களை அழைக்காமல் ஒன்றிய கவுன்சிலர் 8வது வார்டு பெட்டியை எப்படி உடைக்கலாம் என்றும், மறு வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என தேர்தல் அலுவலர் சரவணனிடம் புகார் தெரிவித்தனர். இதனால் இரண்டு மணி நேரம் வரையில் வாக்கு எண்ணிக்கை தடைபட்டது. இதனால் முத்துலாபுரம் கிராம ஊராட்சியில் வாக்கு எண்ணிக்கை பணியும் நிறுத்தப்பட்டது.

அதிமுகவினருக்கு தேர்தல் தோல்வி பயம் ஏற்பட்டதால், சின்னமனூர் அதிமுக ஒன்றிய செயலாளர் விமலேஸ்வரன் மற்றும் அக்கட்சியினர் பாஜகவினரை தூண்டி விட்டு வாக்கு எண்ணிக்கை மையத்தில் ரகளையில் ஈடுபட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் எரிச்சலடைந்த தேர்தல் அலுவலர்கள் அனைவரும் வாக்கு மையங்களை விட்டு வெளியேறி வராண்டாவில் திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே மந்தமாக சென்ற வாக்கு எண்ணிக்கையும், தேர்தல் முடிவு அறிவிப்பும் இப்பிரச்சனையால் மேலும் இரண்டு மணிநேரம் தாமதமானது குறிப்பிடத்தக்கது.

Related Stories: