நாகையில் 2ம் கட்ட தேர்தல் 5 ஒன்றியங்களில் அமைதியாக நடந்த வாக்குப்பதிவு

நாகை, டிச.31:  நாகை மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்களில் தலைஞாயிறு, கீழையூர், வேதாரண்யம், மயிலாடுதுறை, குத்தாலம் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில் நேற்று காலை 7 மணிக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடந்தது.  காலை 7.30 மணி முதல் 9 மணி வரை ராகு காலம் என்பதால் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் பெரும்பாலானவர்கள் காலையிலேயே தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். இதன் பின்னர் வாக்காளர்களை சந்திக்க தொடங்கினர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாகவே இருந்தது. 5 ஊராட்சி ஒன்றியங்களில் அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடந்தது. நேற்று நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில் 897 வாக்குச்சாவடிகள் பயன்படுத்தப்பட்டது.

இதில் ஒற்றை வாக்குச்சாவடிகள் 253, இரட்டை வாக்குச்சாவடிகள் 644. 64 மண்டலங்களாக பிரிக்கப்பட்டிருந்தது. 6923 வாக்குச்சாவடி அலுவலர்கள் பணியாற்றினர். 2 லட்சத்து 22 ஆயிரத்து 881 ஆண் வாக்காளர்களும், 2 லட்சத்து 23 ஆயிரத்து 511 பெண் வாக்காளர்களும் என்று மொத்தமாக 4 லட்சத்து 46 ஆயிரத்து 395 வாக்காளர்கள் வாக்களிக்க இருந்தனர். 192 ஊராட்சி தலைவர் பதவிக்கும், 1542 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கும், 98 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கும், 10 மாவட்ட ஊராட்சி வார்டு பதவிக்கும் என்று மொத்தமாக 1842 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக நேற்று நடந்த வாக்குப்பதிவில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க எஸ்பி செல்வநாகரத்தினம் தலைமையில் 11 டிஎஸ்பிக்கள், 34 இன்ஸ்பெக்டர்கள், 80 சப் இன்ஸ்பெக்டர்கள், 800 காவலர்கள், 350 ஊர்க்காவல் படைவீரர்கள், 50 ஓய்வு பெற்ற காவலர்கள், முன்னாள் படைவீரர்கள் என்று 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related Stories: