குழந்தைகளை பணியில் அமர்த்தினால் 2 ஆண்டு சிறை

திருவாரூர், டிச.16: குழந்தைகளை பணியில் அமர்த்துவோருக்கு அதிகபட்சம் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், 50 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்படும் என மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆனந்த் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:குழந்தை மற்றும் வளர் இளம் பருவ தொழிலாளர் (தடை செய்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம், 1986ன் படி அனைத்து இடங்களிலும் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் அபாயகரமான தொழிலில் 18 வயதுக் குட்பட்ட குழந்தைகளையும் பணிக்கு அமர்த்த தடை செய்யப்பட்டுள்ளது.குழந்தை தொழிலாளர் சட்டத்தினை மீறி குழந்தைகளை வேலைக்கு அனுப்பி வைப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் பெறப்பட்டுள்ளது. குழந்தைகளை பணிக்கு அமர்த்தினால் தடை சட்டத்தின்படி ஆறு மாதம் முதல் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்படும். குழந்தை தொழிலாளர் எவரும் பணிபுரிவதை கண்டறிந்தால் www.pencil.gov.in எனும் இணையதள முகவரியில் தகவல் தெரிவிக்கலாம்.

14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் இருந்தாலும், பணியில் அமர்த்தப்பட்டிருந்தாலும், தகவல்களை 1098 சைல்டு லைன் கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், தொழிலாளர் துறை சிறப்பு சிறார் காவல் பிரிவு மற்றும் திருவாரூர் - 610 004, மாவட்ட கலெக்டர் அலுவலக இணைப்பு கட்டிடம், அறை எண்.310, 311 மூன்றாவது தளத்தில் செயல்படும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு (04366 - 226 299, dcpstvr@gmail.com, 9790052827) ஆகிய அலுவலகங்களுக்கு தகவல் தெரிவித்து உதவுமாறு கேட்டு கொள்ளபபடுகிறார்கள்.இதன் மூலம் திருவாரூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் எவரும் இல்லாத நிலை என்ற இலக்கினை அடையலாம். இவ்வாறு கலெக்டர் ஆனந்த் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: