கொங்கணாபுரம் அருகே குட்டையில் மூழ்கி 2 வயது குழந்தை பலி

இடைப்பாடி, டிச.13: இடைப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம் அடுத்த கொண்டிதாசன்வளவு பகுதியை சேர்ந்தவர் சீரங்கன்(30). இவர் சேலத்திலுள்ள தனியார் கம்பெனியில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கெளரி(25) என்ற மனைவியும், 2 வயதில் சஞ்சித் என்ற குழந்தையும் உள்ளனர்.  இந்நிலையில், நேற்று வழக்கம் போல் சீரங்கன் வேலைக்கு சென்றிருந்தார். கெளரி வீட்டு வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டின் முன்பு குழந்தை விளையாடி கொண்டிருந்தான். அப்போது, அங்கிருந்த 2 அடி ஆழமுள்ள சிறிய குட்டையில் குழந்தை சஞ்சித் திடீரென தவறி விழுந்தான். தொடர்ந்து, மூச்சுத்திணறல் ஏற்படவே கத்தி கூச்சலிட்டுள்ளான். குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு வெளியே வந்த கெளரி குட்டையில் குழந்தை விழுந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து, குட்டையிலிருந்து குழந்தையை மீட்டு, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஜலகண்டாபுரம் அரசு மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்தனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதை கேட்ட கெளரி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதையடுத்து, தகவலறிந்து வந்த கொங்கணாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். குட்டையில் மூழ்கி குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Advertising
Advertising

Related Stories: