மாவட்டத்தில் 5 ஊராட்சி ஒன்றியங்களில் ஆண்களை விட பெண் வாக்காளர் அதிகம்

சேலம், டிச.12: சேலம் மாவட்டத்தில் 5 ஊராட்சி ஒன்றியத்தில் ஆண்களை விட அதிகமாக இருப்பதால், மகளிர் சுயஉதவிக்குழு, பெண் வாக்காளர்களை கவர்ந்து ஓட்டுகளாக மாற்ற வேட்பாளர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 27 மற்றும் 30ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இதேபோல், வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகளில்,  அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஒன்றிய வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர் என 2,294 பதவிகளுக்கு முதற்கட்டமாக, 27ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. தொடர்ந்து, 30ம் தேதியன்று இரண்டாம் கட்டமாக, 2,005 பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படவுள்ளது. உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை ஒவ்வொரு ஓட்டும் மிக முக்கியமானதாக கருதப்படும். ஏனெனில் பல பதவிகளுக்கு வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக ஒவ்வொரு ஓட்டும் இருக்கும். இதனால், தங்களுக்கான வித்தியாசமான பிரசார வியூகங்களை வகுத்து வருகின்றனர்.

இதனிடையே, சேலம் மாவட்டத்தில் உள்ள அயோத்தியாபட்டணம் (பெண்-60,774, ஆண்-59,188), கெங்கவல்லி (பெண்-30,323, ஆண்-28,972), பெத்தநாயக்கன்பாளையம் (பெண்-45,020, ஆண்-43,823), தலைவாசல் (பெண்-55,907, ஆண்-53,518) மற்றும் வாழப்பாடி (பெண்-34,259, ஆண்-33,225) ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில் ஆண் வாக்காளர்களை விட, பெண் வாக்காளர்களே அதிகமாக உள்ளனர். இவை அனைத்தும் சேலம் மாவட்டத்தின் கிழக்கு பகுதிகளில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றியங்களாகும். இதேபோல், பனமரத்துப்பட்டி (பெண்- 38,309, ஆண்-38,615), சேலம் (பெண்-34,017, ஆண்-34,680) ஊராட்சி ஒன்றியங்களிலும், ஆண், பெண் வாக்காளர் வித்தியாசம் மிகக்குறைவு. இந்த அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் இரண்டாம் கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. எனவே, மேற்கண்ட பகுதிகளில் பெண்களின் வாக்குகளை கவர்ந்தால், எளிதில் வெற்றிபெறக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், அதற்கான வழிமுறைகளை கண்டறியும் நடவடிக்கைகளில் அரசியல் கட்சி வேட்பாளர்களும், சுயேட்சையாக போட்டியிடுபவர்களும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். அதேசமயம், கிராமப்புறங்களில் குறிப்பிட்ட சதவீத பெண்கள், அந்தந்த பகுதிகளில் உள்ள ஏதேனும் ஒரு மகளிர் சுய உதவிக்குழுக்களில் உறுப்பினர்களாக உள்ளனர். அந்த சுயஉதவிக்குழுக்களை, தங்களுக்கான ஓட்டுகளாக மாற்றும் முயற்சியும் நடந்து வருகிறது.  இதன் காரணமாக,  மகளிர் குழுக்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது. இதேபோல், ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திலும், பெண்கள் பலர் வேலை செய்து வருகின்றனர். அவர்களின் ஓட்டுகளை பெறவும் தீவிரமாக யோசனை செய்து வருகின்றனர்.

Related Stories: