தலைநகரில் மருத்துவ கல்லூரி அமைவது நாகை மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியாகும்

நாகை, டிச.12: மாவட்ட தலைநகரான நாகையில் அரசு மருத்துவக்கல்லூரி அமைவது நாகை மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சி தருகிறது என்று அழகான நாகை, வளமான நாகை இயக்கம் தெரிவித்துள்ளது. அழகான நாகை, வளமான நாகை இயக்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் நாகையில் நடந்தது. தலைவர் தமிழரசன் தலைமை வகித்தார். செயலாளர் கார்த்திகேயன் வரவேற்றார். பொருளாளர் கோபி முன்னிலை வகித்தார். கூட்டத்தின் முடிவில் தலைவர் தமிழரசன் கூறியதாவது:

இயற்கை பேரிடர் ஏற்படும்போது எல்லாம் நாகை பாதிப்புக்குள்ளாகிறது. அருகில் உள்ள இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் தாக்கப்படும்போது நாகை மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். நாகை மாவட்டத்தில் மீன்பிடி தொழிலை தவிர வேறு எதுவும் இல்லை.

மீன்பிடி இறங்குதளம் தவிர வேறு எதுவும் நாகையில் இல்லை. இதனால் நாகை பகுதி மக்கள் முழு மருத்துவ சேவையை பெற திருவாரூர், தஞ்சை பகுதியை தேடி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் நாகையில் அரசு மருத்துவக்கல்லூரி அமைய வேண்டும் என்று நீண்ட நாள் கோரிக்கை வைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் மாவட்ட தலைநகரமான நாகையில் அரசு மருத்துவக்கல்லூரி அமைய மத்திய, மாநில அரசுகள் நாகை அருகே ஒரத்தூரில் இடம் தேர்வு செய்து அதற்கான நிதியினை ஒதுக்கீடு செய்து ஒப்பந்த புள்ளியும் கோரப்பட்டுள்ளது. இது நாகை மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சி தருகிறது. மாவட்ட தலைநகரில் அரசு மருத்துவக்கல்லூரி அமைவது சிறந்தது ஆகும். மற்ற மாவட்டங்களில் இந்த நடைமுறைகள் உள்ளது. நாகையில் மருத்துவக்கல்லூரி அமைய யார் தடுத்தாலும் அதை எதிர்த்து போராட அழகான நாகை, வளமான நாகை இயக்கம் சார்பில் தயாராக இருக்கிறோம். அரசு விரும்பினால் எதிர்காலத்தில் மயிலாடுதுறையில் மற்றொரு மருத்துவக்கல்லூரியை அமைக்க விரும்பினால் அதை வரவேற்கிறோம் என்றார்.

Related Stories: