தூத்துக்குடி அருகே தொடர் மழையால் உருக்குலைந்த சாலை வாகனஓட்டிகள் கடும் அவதி

ஸ்பிக்நகர்: தூத்துக்குடி அருகே தொடர் மழையால் உருக்குலைந்த நிலைக்கு அத்திமரப்பட்டி- குலையன்கரிசல் சாலை மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். தூத்துக்குடி அருகேயுள்ள அத்திமரப்பட்டி-  குலையன்கரிசல் சாலையில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு, தனியார் ஊழியர்கள், விவசாயிகள், உப்பளத் தொழிளாளர்கள், பல்வேறு பணிக்கு செல்வோர் என பல்வேறு தரப்பினரும் இச்சாலையை தினமும் பயன்படுத்தி வருகின்றனர். அத்திமரப்பட்டியில் இருந்து பொட்டல்காடு வழியாக குலையன்கரிசல்,  கூட்டாம்புளி, புதுக்கோட்டை, சிவத்தையாபுரம், சாயர்புரம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்வோரும்  இந்தச் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும் முறையான பராமரிப்பின்றி இச்சாலை ஆண்டுதோறும் சேதமடைந்து வந்தது. குறிப்பாக மருந்துக்குக்கூட கடந்த சில ஆண்டுகளாக பராமரிக்கப்படவில்லை. இதனால் சாலையில் உருவான ராட்சத பள்ளங்களால் வாகனஓட்டிகள் பரிதவித்தனர். இவ்வழியாக வருவோர், இப்பள்ளத்தில் கீழே விழுந்து விபத்துக்கு உள்ளாகும் அவலமும் தொடர்ந்தது.

மேலும் முறையாக சாலை சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படவில்லை. இதனால் இந்த சாலை வழியாக  செல்லும் மக்கள் முள்ளக்காடு, பொட்டல்காடு வழியாக சுமார் 4 கி.மீ. தொலைவு சுற்றிச்செல்லும் அவலம் உருவானது. ஏற்கனவே உருக்குலைந்திருந்த இச்சாலை அண்மை காலமாக தொடர்ந்து பெய்த மழையால் தற்போது சேறும், சகதியுமாக மாறியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பாதசாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் அவதிப்படுகின்றனர். குறிப்பாக இருச்சக்கர வாகனத்தில் வருவோர், நிலை தடுமாறி வேறு எங்காவது சென்று வழுக்கிவிழும் அபாயமும் நிலவுகிறது. எனவே, இனியாவது சம்பந்தப்பட்டஅதிகாரிகள் இதுவிஷயத்தில் தலையிட்டு, உருக்குலைந்த இச்சாலையை சீரமைக்கும் பணிகளை விரைந்து துவங்கிட முன்வரவேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.

Related Stories: