மாவட்டம் முழுவதும் 4,299 பதவிகளுக்கு தேர்தல் முதல்நாளில் 309 பேர் வேட்புமனு தாக்கல்

சேலம், டிச.10:சேலம் மாவட்டத்தில் 4,299 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. முதல்நாளில் 309 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு வரும் 27, 30ம் தேதியில் இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. வரும் 16ம் தேதி மனு தாக்கல் செய்ய கடைசிநாளாகும். சேலம் மாவட்டத்தில், 29 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 20 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 288 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 385 கிராம ஊராட்சி மன்றத்தலைவர் மற்றும் 3,597 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என ஒட்டுமொத்தமாக 4,299 பதவிகளுக்கு 2 கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.  கிராம ஊராட்சி அலுவலகங்களில் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், ஒன்றிய அலுவலகங்களில் கிராம ஊராட்சி தலைவர், ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் வேட்புமனு தாக்கல் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணி வரை நடந்தது. இதில், அரசியல் கட்சியினர் யாரும் நேற்று வேட்புமனுக்களை தாக்கல் செய்யவில்லை. மதியம் வரை அனைத்து அலுவலகங்களும் வெறிச்சோடியே காணப்பட்டது. தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மட்டும் அலுவலகத்தில் காத்திருந்தனர்.

மதியத்திற்கு பின் ஒருசில கிராம ஊராட்சிகளில் வார்டு உறுப்பினர் பதவிக்கு சிலர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இதன்படி, மேச்சேரி (3வது வார்டு) மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிக்கு சுயேட்சை வேட்பாளராக தேர்தல் மன்னன் பத்மராஜன் மனு தாக்கல் செய்தார். மற்ற மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 8 பேரும், ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கு 29 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 271 பேரும் என முதல்நாளில் ஒட்டுமொத்தமாக 309 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதேபோல், ஒவ்வொரு அலுவலத்திலும் வேட்புமனுக்களை வாங்கிச் செல்ல அதிகபடியானோர் வந்திருந்தனர். மனுக்களை பெற்றுச் சென்றவர்கள் இன்னும் ஓரிருநாளில் வேட்புமனுக்களை தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், திமுக மற்றும் அதிமுகவில் கூட்டணி கட்சியினருடன் பேசி வருகின்றனர். கூட்டணி உடன்படிக்கை ஏற்பட்டபின் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர், ஒன்றிய ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு கட்சியினர் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனர். மனு தாக்கலையொட்டி, ஒவ்வொரு அலுவலகத்திலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: