ரெட்டிபாளையம் வேதவள்ளி நகரில் சேறும், சகதியாக மாறிய மண் சாலை

தஞ்சை, டிச.5: தஞ்சை ரெட்டிபாளையம் அருகே வேதவள்ளி நகரில் மண் சாலை மழையில் சேறும் சகதியுமாக மாறியதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.தஞ்சை ரெட்டிப்பாளையம் சாலையில் உள்ள வேதவள்ளி நகரில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தார்சாலை வசதியின்றி மக்கள் பல ஆண்டுகளாக சிரமத்தை அடைந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் பலத்த மழையால் இங்குள்ள மண் சாலை சேறும், சகதியுமாக மாறிவிட்டது. இதில் எங்கு பள்ளம் உள்ளது என்பதை கண்டுபிடித்து பைக்கில் செல்வோரும், நடந்து செல்வோரும் பயன்படுத்த வேண்டிய அவலநிலையில் உள்ளனர். பல இடங்களில் மழைநீர் தேங்கி கொசு உற்பத்தியாகி பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் இப்பகுதிவாசிகள் பீதி அடைந்துள்ளனர்.

Advertising
Advertising

இச்சாலையில் சீருடையில் செல்லும் பள்ளி மாணவ, மாணவிகள் சேற்றில் இறங்கி நடந்து செல்ல வேண்டியுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ளனர். பைக்கில் செல்வோர் சேற்றில் சிக்கி கீழே விழுந்து உடைகளில் சேறும் சகதியுமாக எழுந்து செல்கின்றனர். முதியவர்கள் சாலையில் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். மேலும் கார், மினிலோடு வேன்கள் இச்சாலையில் செல்வதால் சேறு இருபுறமும் அடித்து சாலை மேலும் மோசமாக காட்சி அளிக்கிறது.இச்சாலையை செப்பனிட்டு தார்சாலையாக மாற்றகோரி பலமுறை இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. உடனடியாக இப்பகுதியில் தார்சாலை அல்லது சிமென்ட் சாலை அமைக்க சம்பந்தப்பட்ட ஊராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: