காவேரிப்பாக்கம் அருகே 11 வயது மகளுக்கு பாலியல் துன்புறுத்தல் தந்தை போக்சோவில் கைது

காவேரிப்பாக்கம், டிச.5: காவேரிப்பாக்கம் அருகே 11 வயது மகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த தந்தையை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 11 வயது சிறுமி. கடந்த செப்டம்பர் 15ம் தேதி சிறுமியின் தாய் ஆடு மேய்க்க சென்றார். சிறுமி மட்டும் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, வீட்டிற்குள் குடிபோதையில் வந்த அவரது தந்தை ரவிக்குமார் (43) சிறுமியை பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதனால், அன்று மாலை சிறுமிக்கு காய்ச்சல் வந்தது. இதைப்பார்த்த அவரது தாயார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தார். இந்நிலையில் சிறுமிக்கு நேற்று முன்தினம் மீண்டும் கடும் காய்ச்சல் ஏற்பட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த அவரது தாயார் சிறுமியை வேலூர் தனியார் மருத்துமனையில் சோதனைக்கு அழைத்து சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்துள்ளது. இதனால், காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என தெரிவித்தனர். இதையடுத்து, அவரது தாயார் சிறுமியிடம் கேட்டபோது சிறுமி நடந்ததை கூறியுள்ளார். இதில் பெற்ற மகளுக்கு தந்தையே பாலியல் துன்புறுத்தல் செய்ததை அறிந்த தாயார் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து, காவேரிப்பாக்கம் போலீசில் மனைவி கணவர் மீது புகார் அளித்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிந்து சிறுமியின் தந்தை ரவிக்குமாரை கைது செய்து வாலாஜா கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>