உள்ளாட்சி தேர்தலை ஒத்திவைக்க வேண்டும்

ஈரோடு,  டிச. 3:   ‘‘தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை 2021ம் ஆண்டு வரை ஒத்திவைக்க  வேண்டும்,’’ என காங்கயம் தொகுதி எம்.எல்.ஏ. தனியரசு ஈரோட்டில் கூறினார். அதிமுக  கூட்டணி கட்சியான தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவரும், காங்கயம்  தொகுதி எம்.எல்.ஏ.வுமான தனியரசு ஈரோட்டில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:  தமிழகத்தில் கடந்த 2016ம் ஆண்டு முதல்  உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் பல்வேறு காரணங்களுக்காக தள்ளிப்போனது.  தற்போதுகூட உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நிலுவையில்  உள்ளது. எனினும் பொதுமக்களின்  நலனுக்காக உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்.  அனைத்து அரசியல் கட்சி  தலைவர்களும் முறையாக கலந்து ஆலோசித்து வருகிற 2021ம் ஆண்டு வரை உள்ளாட்சி  தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும். அந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற  பின்னர் உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம். எங்களை பொறுத்தவரையில் உள்ளாட்சி  தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்போம். மேலும் நடிகர்கள்  ரஜினிகாந்த்-கமலஹாசனால் அரசியலில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது. இவர்கள் எந்தவித மக்கள் போராட்டத்தில் கலந்து  கொள்ளவும் இல்லை. ஆனால் திடீரென அரசியல் அரியணையில் அமர நினைப்பது தவறு. அவர்கள் மற்ற  கட்சிகளுடன் இணைந்து செயல்படலாம். தமிழக மக்கள் இனி நடிகர்களை ஏற்றுக்கொள்ள  மாட்டார்கள். அவர்கள் 2 பேரும் தேர்தலில் நின்றால் ஒரு ஓட்டு கூட  கிடைக்காது. இவ்வாறு தனியரசு எம்.எல்.ஏ.கூறினார்.

Related Stories: