காரைக்காலில் இருந்து தஞ்சைக்கு 2,600 டன் யூரியா மூட்டைகள் வந்தது

தஞ்சை, நவ. 27: காரைக்கால் துறைமுகத்தில் இருந்து தஞ்சைக்கு 2.600 டன் யூரியா மூட்டைகள் வந்தது.

தஞ்சை மாவட்டத்தில் 1.10 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடியும், 30 ஆயிரம் ஏக்கரில் தாளடியும சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதற்கு தேவையான அடியுரம், மேலுரத்துக்கு யூரியா பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கடந்த பல நாட்களாக தஞ்சை மாவட்டத்தில் யூரியா உரம் தட்டுப்பாடு தலைவிரித்தாடியது. விவசாயிகள் காலத்தில் உரமிட்டால் மட்டுமே பயிர்கள் பருவத்தில் வளர்ச்சி அடையும். ஆனால் காலங்கடந்து உரமிடுவது பயன்தராது என்பதால் விவசாயிகள் உரம் வேண்டி கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்நிலையில் காரைக்கால் துறைமுகத்தில் இருந்து தஞ்சை ரயில் நிலையத்துக்கு நேற்று 42 ரயில் வேகன்களில் 2,600 டன் யூரியா வந்தது. இவற்றை லோடுமேன்கள் மூலம் லாரிகளில் ஏற்றி தஞ்சை மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பும் பணியில் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.724 டன் யூரியா உரம் வந்தது: தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தில் இருந்து கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு 21 ரயில் வேகன்களில் 724 டன் யூரியா, 316 டன் டிஏபி, 285 டன் 20 20 காம்பளக்ஸ் உரங்கள் நேற்று வந்தன. இதையடுத்து ரயில் வேகன்களில் இருந்து லாரிகளில் உர மூட்டைகளை தொழிலாளர்கள் அடுக்கி வைத்தனர். இதையடுத்து தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் உள்ள தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு லாரிகள் மூலம் உர மூட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டது.

Related Stories: