அரியலூரில் கூலி வேலைகள் செய்யும் வெளிமாநிலத்தவர்களின் கைரேகை பதிவு

அரியலூர், நவ. 22: அரியலூர் மாவட்டத்தில் கூலி வேலை செய்யும் வெளிமாநிலத்தவர்கள் குற்ற சம்பவங்களில் ஈடுபடாமல் இருக்கவும், அவ்வாறு ஈடுபட்டால் எளிமையாக கண்டறியவும் அவர்களின் கைரேகைகளை போலீசார் பதிவு செய்தனர். அரியலூர் மாவட்டத்தில் திருட்டு, வழிபறி போன்ற குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையிலும், அவற்றை எளிமையாக கண்டறியும் வகையிலும் அனைத்து வணிக நிறுவனங்கள், தனியார் சிமென்ட் ஆலைகள் மூலம் முக்கிய சாலை சந்திப்புகள், மக்கள் கூடும் இடங்கள் என பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்த நடவடிக்கையை எஸ்பி சீனிவாசன் மேற்கொண்டார்.

அதேபோல் மாவட்ட காவல்துறை சார்பில் கடைவீதி, பேருந்து நிலையங்கள் போன்ற இடங்களிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்த நடவடிக்கை மேற்கொண்டார். மேலும் மாவட்ட எல்லையில் புதியதாக சோதனைச்சாவடிகள் அமைத்து கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிமென்ட் ஆலைகள், துரித உணவகங்கள் ஆகியவற்றில் ஒப்பந்த அடிப்படையிலும், தினக்கூலியாகவும் பணிபுரியும் வெளிமாநிலத்தவர்கள், போர்வை, பூட்டு உள்ளிட்ட பொருட்கள் விற்பதற்காக வெளிமாநிலத்தவர்கள் அதிகளவில் தங்கியுள்ளனர். அவர்களை கண்டறிந்து அவர்களின் கைரேகைகளை பதிவு செய்ய எஸ்பி சீனிவாசன் உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் கடந்த 2 நாட்களாக மாவட்ட காவல்துறையினர், வெளிமாநிலத்தவர்களின் கைரேகைகளை பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் குற்ற சம்பவங்களில் வெளிமாநிலத்தவர்கள் ஈடுபடுவது தடுக்கப்படும். இவர்கள் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டால் எளிதில் கண்டறிய உதவியாக இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: