கோவை மேற்கு மண்டல அணி தடகள போட்டியில் 3ம் இடம்

சேலம், நவ.22: காவல்துறை தடகள போட்டியில், கோவை மேற்கு மண்டல அணி மூன்றாம் இடம் பிடித்தனர். இதில் பதக்கங்கள் வென்ற சேலம் வீரர்களை சரக டிஐஜி பாராட்டினார். தமிழக காவல்துறையில், மண்டலங்களுக்கு இடையே தடகள போட்டிகள், ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இதில், நடப்பாண்டு தடகள போட்டி மதுரையில் நடந்தது. இதில், கோவை மேற்கு மண்டலம் சார்பில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்ட போலீசில் பணியாற்றி வரும் தடகள வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வட்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, பதக்கங்களை வென்றனர். இதில், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை சென்னை மாநகர போலீசாரும், 2ம் இடத்தை சென்னை ஆயுதப்படை போலீசாரும் பெற்றனர். மூன்றாம் இடத்தை கோவை மேற்கு மண்டலம் பிடித்தது.

இந்த தடகள அணியில் இடம்பெற்று, 10 தங்கம், 3 வெள்ளி, 10 வெண்கலம் என 23 பதக்கங்களை சேலம் மாவட்ட போலீசில் பணியாற்றும் ஏட்டுகள் மாதேஷ், சுரேஷ்குமார், டோமினிக் சேவியர், மோகன்குமார், பொன்னுசாமி, செந்தில்குமார், தமிழரசி, அருள்மொழி உள்ளிட்ட 12 பேர் பெற்றிருந்தனர். இதேபோல், திருச்சியில் போலீஸ், பொதுமக்களுக்கிடையே நடந்த தடகள போட்டியில் பங்கேற்று 5 தங்கம், தலா 4 வெள்ளி, வெண்கலம் என 13 பதக்கங்களை வென்றனர். இந்த வீரர், வீராங்கனைகள் நேற்று, சரக டிஐஜி பிரதீப்குமாரிடம் பதக்கங்கள், சான்றிதழ்களை காட்டி பாராட்டு பெற்றனர். தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் பங்கேற்று சாதனை படைக்க வேண்டும் என அறிவுறுத்தினார். அப்போது, எஸ்பி தீபாகனிகர், டிஎஸ்பி ஜான்சன் உடனிருந்தனர்.

Related Stories: