ஆவினில் தேங்கி நிற்கும் தண்ணீரை ஏரிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை

சேலம், நவ.22: சேலம் ஆவின் வளாகத்தில் தேங்கி நிற்கும் மழை நீரை ஏரிக்கு கொண்டு செல்ல பொதுமக்களுடனான கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சேலம் தளவாய்ப்பட்டியில் ஆவின் பால்பண்ணை இயங்கி வருகிறது. இங்கிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு, ஆவின் உள்ளேயே தேக்கி வைக்கப்படுகிறது. சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக, ஆவின் பின்புறம் உள்ள ரொட்டிக்காரன் தெரு பகுதியில் உள்ள வீடுகளுக்குள் ஊற்று வந்தது. மேலும் அப்பகுதியில் விவசாயம் செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள தண்ணீரின் நிறம் மாறியதால் மக்கள் அவதியுற்றனர். இதையடுத்து ஊற்று நீரை மோட்டார் மூலம் அப்புறப்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ஆவினின் கழிவு நீர் தேக்கி வைக்கப்படுவதால் வீடுகளுக்குள்  ஊற்றுஏற்பட்டு கடும் அவதிக்கு ஆளாகியுள்ளோம். இந்த தண்ணீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். இதுகுறித்து ஆவின் நிர்வாகத்திடம் கடந்த ஒரு மாதமாக, அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். மேலும் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டனர்.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பொதுமக்களுடனான அமைதி பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. இதில், எம்எல்ஏ வெங்கடாசலம், ஆவின் பொதுமேலாளர் விஜய்பாபு, சேர்மன் ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது, பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகையில், தண்ணீரை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். தேங்கி கிடக்கும் கழிவு நீரை நிரந்தரமாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்ற கோரிக்கைகளை முன் வைத்தனர். பின்னர் வெங்கடாஜலம் எம்எல்ஏ பேசுகையில், ‘ஆவினில் இருக்கும் தண்ணீரை தளவாய்பட்டி ஏரிக்கு கொண்டு செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். எனது சட்டமன்ற தொகுதி நிதி, பஞ்சாயத்து நிதி, ஆவின் நிதியுடன் பைப் லைன் அமைத்து, நிரந்தர தீர்வு காணப்படும். விரைவில் திட்டம் தயாரித்து பணிகள்  துவங்கும்,’ என்றார்.

இதுகுறித்து ஆவின் பொதுமேலாளர் விஜய்பாபு  கூறுகையில், ‘ஆவினில் தேங்கியிருக்கும் தண்ணீர் மழை நீராகும். கழிவு நீர் அல்ல. எங்களுக்கே தண்ணீர் தேவைப்படுகிறது. ரொட்டிக்காரன் தெரு பகுதி 10 அடி பள்ளமான பகுதியாகும். தற்போது வழக்கத்தை விட நல்ல மழைபெய்துள்ளதால், ரொட்டிக்காரன்தெரு பகுதியில் தண்ணீர் ஊற்றெடுத்துள்ளது. தற்போது அந்த தண்ணீரை தளவாய்பட்டி ஏரிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், தளவாய்பட்டி அரசு பள்ளியை ஆவின் தத்தெடுத்து, அடிப்படை வசதிகளை  செய்து கொடுக்க இருக்கிறோம்,’ என்றார்.

Related Stories: